பொன்முடிக்கு பதவி! இறங்கி வந்த கனிமொழி! ஸ்டாலின் போட்ட கண்டிஷன்
முக்கியமான கண்டிஷனுடன் தான் முதலமைச்சர் ஸ்டாலின் துணை பொதுச்செயலாளர் பதவியை பொன்முடியிடம் ஒப்படைத்துள்ளதாக சொல்கின்றனர். பொன்முடி மீண்டும் பதவிக்கு வருவதற்கு கனிமொழி முட்டுக்கட்டையாக இருந்ததாக பேச்சு அடிபட்ட நிலையில், பொன்முடி அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் பொன்முடியின் அதிகாரத்தை பறித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். கட்சியில் துணை பொதுச்செயலாளர்கள் பதவியையும், ஆட்சியில் அமைச்சர் பதவியையும் இழந்து நின்றார். பொன்முடி விவகாரத்தில் திமுக எம்.பி கனிமொழி எதிர்ப்பு தெரிவித்து முதல் ஆளாக குரல் கொடுத்தார். அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என வெளிப்படையாகவே சொன்னார் கனிமொழி.
பதவிகளில் இருந்து இறக்கப்பட்ட பொன்முடி விழுப்புரம் திமுக வட்டாரத்திலும் ஓரங்கட்டப்பட்டார். பொன்முடியின் இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமணன் போராடி வந்தார். அவரும் அவரது ஆதரவாளர்களும் பொன்முடியை ஓரங்கட்டி வந்ததாக பேச்சு அடிபட்டது. இருந்தாலும் தலைமையிடம் பொன்முடியின் இடத்தை லட்சுமணன் பிடிக்க முடியாமல் திணறியதால் விழுப்புரத்தின் முகமாக பொன்முடிக்கு மீண்டும் பதவி கிடைக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது.
பொன்முடியும் பதவி தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொடர்ந்து தூது அனுப்பி வந்ததாக திமுக வட்டாரத்தில் சொல்கின்றனர். நான் பேசியது தவறுதான், இனிமேல் சர்ச்சையான கருத்துகள் பேச மாட்டேன் என ஸ்டாலினிடம் பொன்முடி வாக்கு கொடுத்துள்ளார். வயது மூப்பை காரணம் காட்டி இதுதான் கடைசி தேர்தல், இதில் சீட் கொடுத்து பதவியும் கிடைத்தால் இத்தனை ஆண்டுகள் அனுபவத்திற்கு பலனாக விழுப்புரத்தில் செல்வாக்கு இருக்கும் என பொன்முடி பேசியதாக சொல்கின்றனர். அதேபோல் விழுப்புரம் திமுக வட்டாரத்தின் கோரிக்கையையும் ஏற்று ஸ்டாலின் பொன்முடிக்கு பதவியை மீண்டும் கொடுக்கும் முடிவை எடுத்ததாக தெரிகிறது.
அதே நேரத்தில் பொன்முடி பேசிய கருத்துக்கு முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.பி கனிமொழி, பொன்முடிக்கு பதவி கொடுப்பதற்கு ஆரம்பத்தில் இருந்தே முட்டுக்கட்டை போட்டதாக பேச்சு அடிபட்டது. ஏற்கனவே பொன்முடி சர்ச்சையாக பேசியதை வைத்து எதிர்க்கட்சிகள் ரவுண்டுகட்டிய நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் பதவி கொடுத்தால் தேர்தல் நேரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதையே பிரச்சாரமாக கையில் எடுக்க வாய்ப்புள்ளதால் தேர்தல் வரை பொன்முடிக்கு எந்தப் பதவியும் கொடுக்க வேண்டாம் என கணக்கு போட்டதாக சொல்கின்றனர்.
அதனால் பொன்முடி கனிமொழியையும் சந்தித்து இனி இப்படி பேசமாட்டேன் என பேச்சுவார்த்தை செய்து நிலைமையை சரிகட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தான் பொன்முடியிடம் துணை பொதுச்செயலாளர் பதவி வந்து சேர்ந்ததாக சொல்கின்றனர். திமுகவில் சட்டப்பேரவை தேர்தல் வேலைகள் வேகமெடுத்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கட்சி பணியை துரிதப்படுத்தும் வகையிலும் பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





















