கரூர் செல்லும் விஜய் மா.செ-க்களுக்கு முக்கிய ORDER தவெகவின் அடுத்த பிளான் | Vijay | TVK Karur Stampede
கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்த தவெக தலைவர் விஜய், அவர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கரூர் தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் நகர செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே, உயர்நீதிமன்றத்தில் அவர்களின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தள்ளனர்.இதேபோல், சமூக வலைதளத்தில் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட ஒரு சர்ச்சைப் பதிவிற்காக அவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரூர் கோர விபத்து நடந்த நிலையில், முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. தவெக சார்பில் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டும் இன்னும் அங்கு செல்லாமல் இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், கரூர் மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க நிச்சயம் வருவேன் என தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் எப்போது கரூர் செல்வார் என்ற கேள்விகள் எழுந்தன.
இப்படிப்பட்ட சூழலில், கரூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர்களிடம் விஜய் தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம், கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசுவது குறித்து கருத்துக்களை அவர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. கரூரை சுற்றியுள்ள மாவட்டச் செயலாளர்களிடம் பேசிய விஜய், பிரச்னைகள் அனைத்தும் சரியாகிவிடும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
மேலும், தவெக குறித்தும், நிர்வாகிகள் குறித்தும் எழும் விமர்சனங்கள் எதற்குமே பதிலளிக்க வேண்டாம் என்று அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, விஜய் விரைவில் கரூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















