Puducherry CM Rangasamy : டாப் 10 கோடீஸ்வர முதல்வர்கள்லிஸ்டில் முதல்வர் ரங்கசாமி!
2025-ம் ஆண்டில், சிறந்த சேவை செய்த முதலமைச்சர்கள் பட்டியலில் இடம்பெறாமல், டாப் 10 பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இடம்பிடித்துள்ளது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025-ம் ஆண்டில், இந்தியாவின் முதல் 10 பணக்கார முதலமைச்சர்களின் பட்டியில், சமீபத்தில் வெளியானது. அந்த பட்டியலில், ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தை பிடித்த நிலையில், 6-வத இடத்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிடித்துள்ளார்.
அதன்படி, 931 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளுடன் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, அருணாசல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, 332 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
3-வது இடத்தில், 51 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளுடன் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளார். 4-வது இடத்தில், 46 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளுடன் நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியூ ரியோ உள்ளார்.
5-வது இடத்தில், மத்திய பிரதேச முதலமைச்சர் டாக்டர். மோகன் யாதவ் 42 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 6-வது இடத்தில், 38 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளுடன் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உள்ளார்.
7-வது இடத்தில் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளுடன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளார். 8-வது இடத்தில், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், 25 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை வைத்துள்ளார்.
9-வது இடத்தில், 17 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளுடன் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா உள்ளார். 14 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளுடன் 10-வது இடத்தை பிடித்திருப்பவர், மேகாலயா முதலமைச்சர் கான்ரட் சங்மா.
இந்த சொத்து விவரங்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் முதலமைச்சர்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த ஆவணங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள சில பெரிய மாநிலங்களின் முதலமைச்சர்களே டாப் 10 சொத்துப் பட்டியலில் இடம்பெறாத நிலையில், மிகச் சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரி முதலமைச்சர், இவ்வளவு சொத்துகளை வைத்திருப்பது எப்படி என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.





















