TN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் குழப்பம்..ஸ்டாலின் முடிவு என்ன? குமுறலில் கவுன்சிலர்கள்
தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. தமிழகம் முழுவதும் வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். ஆனால் தேர்தல் நடைபெறுமா? எப்போது நடைபெறும்? உள்ளிட்ட கேள்வி எழுந்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருந்தால் டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் நடக்க அதிக வாய்ப்பு இருக்கின்றன. அதற்குரிய ஏற்பாடுகளை எல்லாம் மாநில தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுமா?, 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடத்திய மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுமா? என்பது குறித்து முதலமைச்சர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. ஏனென்றால் அதிமுக ஆட்சிக்காலத்தில் அதாவது 2019 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. திமுக 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் எஞ்சிய ஒன்பது மாவட்டங்களில் வார்டு மறுவரையறை எல்லாம் முடித்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.
இப்போது 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மட்டுமே பதவிக்காலம் முடிய இருக்கிறது. மற்ற 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு இன்னும் மூன்று ஆண்டு பதவிக்காலம் இருக்கிறது. அவர்கள் இப்போது தேர்தல் வரக்கூடாது என விரும்புகிறார்கள். அப்படியே நடத்தினாலும் 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தட்டும் என வலியுறுத்துகின்றனர். எஞ்சிய பகுதிகளுக்கும், நகர்புற உள்ளாட்சி தேர்தலையும் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு நடத்த வேண்டும் என்றும் கட்சியினர் உள்ளிட்டோர் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநகராட்சிகளை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவிருந்தது. ஆனால், அது தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.