காஞ்சிபுரத்தில் ஹைடெக் நியாய விலை கடை: நவீன வசதிகளுடன் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்திய எம்.எல்.ஏ!
"பல்வேறு வகையான அம்சங்களுடன் புதிய நியாய விலை கடையை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் திறந்து வைத்தார்."

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48-வது வார்டு, தமிழ்நாடு ஹவுசிங் போர்டு நகர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.19 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அதிநவீன வசதிகள் கொண்ட புதிய நியாய விலை கடையை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
அந்த வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.கே.பி. கார்த்திக் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட இந்த நியாய விலை கடை, காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே ஒரு முன்மாதிரி கடையாகத் திகழும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனியார் வணிக வளாகங்களுக்கு இணையான நவீன வசதிகள்
பொதுவாக நியாய விலை கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்கள் வாங்குவது வழக்கம். ஆனால், இந்தப் புதிய கடையானது பொதுமக்கள் வரிசையில் காத்திருக்காமல் ஓய்வெடுக்கும் வகையில் பூங்கா போன்ற திண்ணை மற்றும் இருக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் சென்று வர தனி வழிப் பாதை (Ramp), மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் நவீன கழிப்பிட வசதி என ஒரு கார்ப்பரேட் அலுவலகத்திற்கு இணையான அனைத்துச் சகல அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, திருவள்ளுவரின் திருக்குறள் வாசகங்கள் பொறிக்கப்பட்ட மரம் மற்றும் செடித் தொட்டிகள் வைக்கப்பட்டு பசுமையான சூழலுடன் இந்தக் கட்டிடம் மிளிர்கிறது.
ஆர்வத்துடன் பார்வையிட்ட பொதுமக்கள்
இன்று நடைபெற்ற திறப்பு விழாவில், சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். அவர் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
இந்த விழாவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, துணை மேயர் குமரகுருநாதன் உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தங்கள் பகுதியில் இவ்வளவு நவீன வசதிகளுடன் கூடிய நியாய விலை கடையைக் கட்டித் தந்ததற்காக அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தங்கள் நன்றியினைத் தெரிவித்தனர்.























