EPS ADMK issue : கடும் கோபத்தில் சீனியர்கள்!எடப்பாடிக்கு END CARD? அதிமுகவில் உள்குத்து |
இபிஎஸ்-க்கு எதிராக அதிமுக சீனியர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், அக்கட்சியில் மீண்டும் ஒரு பூகம்பம் வெடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பரபரப்பு பேச்சு ஆரம்பமாகியுள்ளது. ஓபிஎஸ் மீண்டும் கட்சிக்குள் வருவதற்கான நேரம் வந்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் குஷியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி பூசல் அவ்வப்போது ஹாட் டாப்பிக்காக மாறி வருகிறது. பல கட்ட சட்ட போராட்டங்களுக்கு பிறகு ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுசெயலாளர் ஆனார் இபிஎஸ். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து அதிரடி காட்டினார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளின் ஆதரவோடு அதிமுகவை தன் வசம் வைத்துள்ளார் இபிஎஸ். ஆனால் விரைவில் அதிமுகவில் இணைந்து வெளியேறியவர்கள் ஒன்று சேர்வார்கள் என்று சசிகலா சூளுரைத்து வருகிறார்.
மற்றொரு பக்கம் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் பிளவு ஏற்படுவதாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது. கட்சியை அவரால் சிறப்பாக நடத்த முடியவில்லை என சீனியர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் பெயர் அடிபடுகிறது. தனித்தனியாக கூட்டங்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தனக்கு எதிராக இந்த வேலைகளில் ஈடுபடுவது யார் என்று இபிஎஸ்-ம் ரிப்போர்ட் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்படும் என அமைச்சர் ரகுபதி பற்றவைத்தார். இதற்கு எஸ்.பி.வேலுமணியும், செங்கோட்டையனும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இபிஎஸ்-க்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை, அதிமுகவுக்கு விசுவாசமாக இருப்போம் என கூறியுள்ளனர்.
மற்றொரு பக்கம் அதிமுகவில் தொண்டர்கள் பலம் தனக்கு தான் இருப்பதாக ஓபிஎஸ் கூறி வருகிறார். தொண்டர்கள் மீட்பு குழு தொடங்கியுள்ள ஓபிஎஸ், மீண்டும் அதிமுகவிற்குள் வரப்போகும் நேரம் வந்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இபிஎஸ்-க்கு எதிராக கிளம்பும் அலை ஓபிஎஸ்-க்கு சாதகமாக இருக்கும் என பேசப்படுகிறது.
அதிமுக மக்களவை தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் பட்சத்தில், கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.