தேஜஸ்வி நேருக்கு நேர்! அடித்துக்கொள்ளும் RJD-காங்கிரஸ்!
பீகாரில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். சில தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதும் வகையில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு கூட்டணிக்குள் இருக்கும் விரிசலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. தொகுதி பங்கீடு விவகாரத்தில் 2 கட்சிகளுமே இறங்கி வராமல் முரண்டு பிடிப்பதால் கூட்டணிக்குள் குழப்பம் நிலவுகிறது.
243 தொகுதிகளை கொண்ட பீகாரில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்து வேட்பாளர்கள் பட்டியலும் வந்துவிட்டது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதியையும் பாஜக 101 தொகுதியையும் சரிசமமாக பிரித்து கொண்டன. அதே நேரத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் முடிவுக்கு வராமல் இழுத்து கொண்டிருக்கிறது.
காங்கிரஸுக்கு 50க்கும் அதிகமான சீட் கொடுக்க ராஷ்டிரிய ஜனதா தளம் ரெடியாக இல்லை என சொல்கின்றனர். ஏனென்றால் 2020 சட்டமன்ற தேர்தலில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறையும் அதே அளவு தொகுதிகளை காங்கிரஸ் எதிர்பார்க்கும் நிலையில் அதற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சில தொகுதிகளை 2 கட்சிகளுமே விட்டுக் கொடுக்காமல் போட்டி போடுவதுதான் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் என சொல்கின்றனர்.
இந்தநிலையில் தொகுதி பங்கீடே முடிவுக்கு வராத நேரத்தில் தேஜஸ்வி யாதவ் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் 143 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதேபோல் காங்கிரஸும் 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் கடந்த தேர்தலில் 144 தொகுதிகளில் களமிறங்கிய நிலையில் இந்த முறை ஒரு தொகுதி குறைவாக களமிறங்குகிறது. இருந்தாலும் 2 தரப்பில் இருந்துமே தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அதிலும் 9 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், சிபிஐ என கூட்டணியினரே நேருக்கு நேர் மோதும் வகையில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 6 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளமும் காங்கிரஸும் மோதுகின்றன. 2 கட்சிகளுமே ஒரே தொகுதியை குறிவைத்து முரண்டு பிடிப்பது இதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தியா கூட்டணியினர் இந்த போட்டியை நட்பான சண்டை என பெயர் வைத்து எங்களுக்கு எந்த பிர்ச்னையும் இல்லை என சொல்லி வருகின்றனர். ஆனால் ஒரே தொகுதியில் மோதுவதற்கு எதற்கு கூட்டணி வைகக் வேண்டும் என பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியை வீழ்த்தி முதலமைச்சர் இருக்கையில் உட்கார்ந்து விட வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் தேஜஸ்வி யாதவிற்கு தொகுதி பங்கீடு விவகாரமே சறுக்கலாக அமைந்துள்ளது. வாக்கு திருட்டு, சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் காங்கிரஸுக்கு கை கொடுத்துள்ளதை சுட்டிக்காட்டி நாங்கள் இறங்கிவர மாட்டோம் என காங்கிரஸும் பிடிவாதமாக இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.





















