Rahul Gandhi in Wayanad : உடைந்துபோன ராகுல்..சோகத்துடன் பயணம்! வயநாடு பேரழிவு களத்தில்..
தன்னை 2 தடவை ஜெயிக்க வைத்த வயநாடு மக்கள் நிலச்சரிவால் பாதிப்படைந்துள்ள நேரத்தில், வயநாட்டுக்கே நேரடியாக சென்று களப்பணியாற்ற ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சூரல்மலையிலிருந்து முண்டகை வரையிலான சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்தப் பகுதியில் அதிகாலை 2 முறை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 500 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள ராகுல், ‘வயநாட்டின் மேப்பாடியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த கவலையடைந்தேன். பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நிலச்சரிவில் சிக்கியவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என நம்புகிறேன். கேரள முதல்வருடனும், வயநாடு மாவட்ட ஆட்சியருடனும் பேசியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் கேரள காங்கிரஸ் கட்சியினர் உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளுக்கு உதவ வேண்டும் என ராகுல்காந்தி உத்தரவிட்டார். 2019 மற்றும் 2024 மக்களவை தேர்தல்களில் ராகுல்காந்திக்கு வெற்றியை தேடி கொடுத்தது வயநாடு தொகுதி. 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் தோல்வியடைந்தாலும் வயநாடு தொகுதி அவரை காப்பாற்றியது. 2024 தேர்தலில் ரேபரேலி, வயநாடு 2 தொகுதிகளிலும் ராகுல் வெற்றி பெற்றதால் வேறு வழியின்றி வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.
அதனால் வயநாடு தொகுதி மக்களுடன் ராகுல்காந்திக்கு நெருக்கமான உறவு உள்ளது. தன் மேல் நம்பிக்கை வைத்த மக்களுக்கு துணையாக இந்த நேரத்தில் அவர்களுக்காக பணி செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளார் ராகுல். அதனால் தானே நேரடியாக வயநாடு சென்று களத்தில் இறங்கி வேலை பார்க்கலாம் என திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.