ஸ்டாலினிடம் பேசிய ராகுல் ! விஜய்க்கும் PHONE CALL! ”என்ன நடந்துட்டு இருக்கு”
கரூர் துயர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி முதலமைச்சர் ஸ்டாலினை உடனடியாக செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.. தவெக தலைவர் விஜய்யிடமும் ராகுல்காந்தி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் நடந்த தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாமக்கலில் பரப்புரையை முடித்த விஜய் சுமார் 7 மணி நேரம் தாமதமாக கரூரில் பிரச்சாரத்தை தொடங்கினார். ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பில் முடிந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உள்ளிட்டோர் உடனடியாக கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என தவெக தலைவர் விஜய் வேதனை தெரிவித்திருந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாயும் இழப்பீடு தருவதாக அறிவித்தார். கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து விஜய் மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இன்னும் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி முதலமைச்சர் ஸ்டாலினை செல்போனில் தொடர்பு விவரங்களை கேட்டுள்ளார். இதுதொடர்பான முதலமைச்சரின் பதிவில் கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
இதேபோல் தவெக தலைவர் விஜய்யிடமும் ராகுல்காந்தி செல்போனில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்கின்றனர். கரூர் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியானவுடன் அடுத்த சில மணி நேரங்களிலேயே ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார். ”கரூரில் அரசியல் பிரச்சாரத்தில் நடந்த மோசமான சம்பவம் வருத்தத்தை கொடுத்துள்ளது. இது பல உயிர்களை பறித்துவிட்டது. அன்புக்குரியவர்களை இழந்து வாடுகிறார்கள். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். மீட்புப் பணிகளில் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.





















