Mamata Banerjee | ”கால்ல கூட விழுகிறேன்” கெஞ்சி கேட்கும் மம்தா! சிக்கலில் திரிணாமுல்
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜிக்கு கடும் சிக்கல் வந்துள்ள நேரத்தில், ”உங்கள் காலில் கூட விழுகிறேன்” என மருத்துவர்களிடம் கெஞ்சி கேட்டுள்ளார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் செமினார் ஹாலில் வைத்து மருத்துவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழ்ந்துள்ளார். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அதனை மூடி மறைப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் கூறி நியாயம் கேட்டு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், அதனை கண்டித்து நாளை மருத்துவ சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் மருத்துவர் கொலை விவகாரம் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு நெருக்கடியாக மாறியுள்ளது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி செயல்படுவதாக போராட்டக்காரர்கள் கூறி வருகின்றனர். தேவைப்பட்டால் குற்றவாளிகளை தூக்கில் போடுவேன் என மம்தா பானர்ஜி அதிரடி காட்டினார். இருந்தாலும் அவருக்கு எதிரான குரல் வலுத்து வருகிறது.
மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சுட்டிக்காட்டி பேசியுள்ள மம்தா பானர்ஜி, ‘நான் உங்களிடம் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றால் உங்கள் காலில் கூட விழ தயாராக இருக்கிறேன். மீண்டும் பணிக்கு திரும்புங்கள். உங்களது போராட்டத்தை யாரும் தடுக்கவில்லை. ஆனால் நீங்கள் பணிக்கு செல்லாததால் கர்ப்பிணி பெண், குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்” என கூறியுள்ளார்.
பெண் மருத்துவர் விவகாரத்தில் நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்துவதால் மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தில் மம்தா பானர்ஜி மருத்துவர்களுக்கு எதிராக இருப்பதாக விமர்சிப்பதால் பரபரப்பான வாக்குவாதமும் ஏற்பட்டு வருகிறது.