Rajya sabha MP : ராஜ்யசபா MP - 3 இடங்களுக்கு மல்லுகட்டும் 300 பேர்!
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் வெற்றி பெற்றதால் இருவரும் வகித்து வந்த ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர். முன்னதாக அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பியாக இருந்த முகமது ஜானும் மாரடைப்பால் காலமாகி இருந்தார். தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பது விதி. காலியாக உள்ள இடங்களுக்கு உடனடியாக இடைத்தேர்தலை நடத்தக் கோரி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உள்ளிட்டோர் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்திருந்தனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று இடங்களுக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என அம்மனுவில் கேட்டிருந்தனர். இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் ஜூலை மாதத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.