High Court Judge Controversy Speech: ”இது இந்துஸ்தான்!இந்துக்கள் தான் ஆளனும்” நீதிபதி சர்ச்சை கருத்து
பெரும்பான்மையினரின் கருத்துக்கு ஏற்ப தான் இந்தியா ஆளப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதியே கூறியிருப்பது சர்ச்சையைப் ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்ற நூலகத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சட்டப் பிரிவு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், ”இது இந்துஸ்தான். பெரும்பான்மையினரின் கருத்துக்கு ஏற்ப தான் இந்துஸ் தான் ஆளப்பட வேண்டும். அப்போது தான் நாடு முன்னேறும். இதை சொல்வதற்கு எனக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை. உயர் நீதி மன்ற நீதிபதியாக இருந்து கொண்டு ஏன் இப்படி பேசுகிறேன் என்று யாரும் கேட்க வேண்டாம்.
பொது சிவில் சட்டமானது இந்திய அரசியலமைப்பு ரீதியாக தேவைப்படுகிறது. பொது சிவில் சட்டமானது, நாட்டின் ஒற்றுமை, பாலின சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
ஆர்எஸ்எஸ், விஎச்பி போன்ற அமைப்புகள் மட்டும் பொது சிவில் சட்டத்தை கோரவில்லை. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமான உச்ச நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறது’ என்று கூறினார். இவரது இந்த கருத்து குறித்து பல்வேறு ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அதாவது, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். பசுக்கள் ஆக்ஸிஜனை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியிடும் உயிரினம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் என்று பசுவதை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட வழக்கில் மேற்கண்ட கருத்துகளை தெரிவித்திருந்தார். இச்சூழலில் உயர் நீதி மன்ற நீதிபதியாக இருக்கும் இவர் மீண்டும் மத ரீதியிலான கருத்தை கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.