EPS meeting | "ஜெ.வை எதிர்த்து பேசுவீங்களா? நான் சொல்றதையும் கேளுங்க” அதிமுகவினரை எச்சரித்த EPS
ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால் தலைமைக்கு எதிராக பேச முடியுமா? நான் சொல்வதை கேட்டு தேர்தல் வேலைகளை பாருங்கள் என அதிமுக நிர்வாகிகளிடம் இபிஎஸ் கறார் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அதிமுக, சில தொகுதிகளி 3வது இடத்துக்கும் தள்ளப்பட்டது. தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. ஆனால் அதெல்லாம் நடக்கவே நடக்காது என இபிஎஸ் விடாப்பிடியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருவதால் நிர்வாகிகளின் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் 2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார் இபிஎஸ்.
மக்களவை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முதல்கட்ட ஆலோசனையில் நிர்வாகிகளிடம் தேர்தல் தோல்வி தொடர்பாக கேட்ட போது கட்சியின் முக்கிய நபர்கள் மீதே குறை சொல்லியுள்ளனர். மேலும் மாவட்ட செயலாளர்கள் தொடர்பாகவும் உட்கட்சி பூசல் தொடர்பாகவும் அனைத்து பிரச்னைகளையும் இபிஎஸ் முன்பாகவே போட்டு உடைத்துள்ளனர். வேட்பாளர்கள் தேர்வு, சரிவர கூட்டணி அமையாததால் தான் வெற்றி பெறவில்லை என்று கூறியுள்ளனர். முக்கிய நபர்களுக்கு எதிராகவே நிர்வாகிகள் எதிர்ப்பு குரலை முன்வைத்தது இபிஎஸ்-க்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தற்போது இரண்டாம் கட்ட ஆலோசனை தொடங்கியுள்ள நிலையில், புகார்களை எல்லாம் ஓரம் வைத்துவிட்டு தேர்தல் பணிகள் தொடர்பாக மட்டும் பேசுங்கள் என இபிஎஸ் சொன்னதாக தெரிகிறது. மேலும் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுங்கள், ஜெயலலிதா இருந்தால் தலைமைக்கு எதிராக பேசுவீர்களா என்று கறார் காட்டியுள்ளார் இபிஎஸ். நிர்வாகிகள் மட்டுமல்லாமல் கட்சியின் சீனியர்களுக்கு இந்த மெசேஜை இபிஎஸ் மறைமுகமாக சொன்னதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.
ஒருங்கிணைப்பு குழு அமைத்து திமுக தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்ட நிலையில், அதிமுக சார்பாக என்னவெல்லாம் செய்யலாம் என நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்டுள்ளார் இபிஎஸ். கட்சிக்குள் இருக்கும் பிரச்னைகளை ஓரம்வைத்துவிட்டு தலைமை உத்தரவின் பேரில் இனி தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபடுங்கள் என இபிஎஸ் சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.