PTR gift to student | சொன்னதை செய்த PTR... மாணவனுக்கு SURPRISE! 11 மாத நெகிழ்ச்சி சம்பவம்
பள்ளியில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல் மெலிந்து காணப்பட்ட மாணவனிடம் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாணவனுக்கு வாக்கு கொடுத்தபடி சைக்கிள் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். மேலும் மாணவனுக்கு தேவையான சத்தான உணவுகளை தொடர்ந்து வாங்கி கொடுத்த நெகிழ்ச்சி சம்பவமும் நடந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை முத்துப்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளிக்கு சென்றிருந்தார். அங்கு மாணவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டார். பேசிக்கொண்டிருக்கும்போதே 7ஆம் வகுப்பு படிக்கும் விஷ்வா என்ற மாணவன் ”தலை வலிக்கிறது, மயக்கம் வருகிறது” என கூறிய உடன் அமைச்சர் மாணவனை தனியாக அமர வைத்து உணவு கொடுக்க சொன்னார். பின்னர் மாணவன் அருகில் அமர்ந்து பேசிய பிடிஆர், உடல் மெலிந்து காணப்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்யுமாறு ஆசிரியர்களிடமும் தனது அலுவலக பணியாளர்களிடம் அறிவுறுத்தினார். இல்லத்திற்கு குழந்தை நல மருத்துவர் மற்றும் டயட்டிசியன்களை அனுப்பி வைத்து அவனை மருத்துவ பரிசோதனை செய்ய வலியுறுத்தினார்.
இரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து பார்த்ததில் மாணவனுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதும், உணவு சாப்பிடுவதில் சிரமம் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் மாணவனையும், குடும்பத்தினரையும் தனது வீட்டிற்கு அழைத்து பேசிய பிடிஆர், உடல்நிலையை கவனித்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது மாணவனிடம் என்ன வேண்டும் என கேட்டதற்கு, சைக்கிள் வேண்டும் என சொல்லியுள்ளார்.
அப்போது, உனது உடல் எடை வெறும் 23 கிலோ மட்டுமே உள்ளது. சைக்கிள் ஓட்ட உனக்கு உடல் பலம் வேண்டாமா? 30 கிலோ எடையை உயர்த்தி கொண்டு வா. நான் உனக்கு சைக்கிள் வாங்கித் தருகிறேன்" என்று வாக்கு கொடுத்துள்ளார் பிடிஆர். அன்றுமுதல் கடந்த 11 மாதங்களாக தொடர்ச்சியாக பழங்கள், மருந்துகள், ஊட்டச்சத்து பானங்களை தனது அலுவலகப் பணியாளர்கள் மூலம் கொடுத்து வந்துள்ளார். அதோடு சேர்த்து உடல் எடை அளக்கும் கருவி ஒன்றை வாங்கித் தந்து வாரம்தோறும் எடையை ஃபோட்டோ எடுத்து வாட்ஸப் மூலம் அனுப்ப சொல்லியுள்ளார்.
பிடிஆரின் உதவியால் மாணவனின் உடல் எடையும் 30 கிலோவை அடைந்துள்ளது. அதனால் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற நினைத்த பிடிஆர், மாணவனை தனது வீட்டிற்கு அழைத்து சைக்கிளை கையில் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
அறிவுரை கொடுத்ததோடு நின்றுவிடாமல் மாணவனுக்கு தேவையானதை கொடுத்து தொடர்ந்து கண்காணித்து வந்த அமைச்சர் பிடிஆருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.