வச்சுசெய்யும் கூட்டணி கட்சிகள்! விழிபிதுங்கும் நிதிஷ் குமார்! ஒரே ஒரு POST
பீகாரில் கூட்டணி கட்சிகள் சேர்ந்து நிதிஷ் குமாருக்கு குடைச்சலை கொடுக்க ஆரம்பித்துள்ளன. கூட்டணி உடைந்து விடுமோ என பாஜக பயத்தில் இருப்பதாக சொல்கின்றனர். நாங்கள் கத்தியை எடுக்க மாட்டோம் என கூட்டணி கட்சி தலைவரே வார்னிங் கொடுத்துள்ளது பீகாரில் புயலை கிளப்பியுள்ளது.
பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியும், தேஜஸ்வி யாதவ் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியும், பிரசாந்த் கிஷோர் தனித்து என மூன்று அணிகளாக களத்தில் மோதுகின்றனர்.
இந்தநிலையில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் அடுத்தடுத்து போர்க்கொடி தூக்கி வருகின்றன. பீகாரில் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க 122 தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும். அதனால் தேசிய ஜனநாயக கூட்டணில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 107 தொகுதியிலும், பாஜக 105 தொகுதியிலும் போட்டியிட முடிவெடுத்துள்ளன. மீதமுள்ள 31 தொகுதியை லோக் ஜனசக்தி ராம் விலாஸ் கட்சி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் சமதா ஆகியவை இடையே பிரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கு முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்தார் லோக் ஜனசக்தி ராம் விலாஸ் கட்சி தலைவர் சிராக் பஸ்வான். எங்களுக்கு குறைந்தது 40 தொகுதியாவது வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். அப்படி கொடுக்கவில்லையென்றால் பிரசாந்த் கிஷோருடன் கூட கூட்டணி வைக்க ரெடி என மிரட்டும் தொனியில் பேசி வருகின்றனர். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் 5 தொகுதியில் போட்டியிட்டு ஐந்திலும் வெற்றி பெற்றது சிராக் தலைமையிலான லோக் ஜனசக்தி. இதனை காரணமாக காட்டி எங்களுக்கு அதிக கொடுத்தே ஆக வேண்டும் என முரண்டு பிடிக்கின்றனர்.
இந்தநிலையில் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியும் 15 தொகுதிகள் கேட்டு போர்க்கொடி தூக்கி நிதிஷ் குமாருக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளது. கடந்த தேர்தலில் இந்த கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறையும் அதே தொகுதிகளை ஒதுக்கவே பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் முடிவெடுத்துள்ளது. ஆனால் இந்த முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்கினால் தான் கூட்டணியில் இருக்கும் முடிவை எடுத்துள்ளது அவாம் மோர்ச்சா.
ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி, மகாபாரதத்துடன் பாஜகவை ஒப்பிட்டு மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ‘நீதி என்று ஒன்று இருந்தால், பாதி அளவு கொடுங்கள். ஏதாவது தடை இருந்தால் 15 கிராமமாவது கொடுங்கள். உங்கள் முழு நிலத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் அதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம். உறவினர்களுக்கு எதிராக வாள் ஏந்த மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
இந்த முறை மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என முடிவாக இருக்கும் நிதிஷ் குமாருக்கு தொகுதி பங்கீட்டால் கூட்டணி கட்சிகளே தலைவலியாக மாறியுள்ளதாக விமர்சனம் இருக்கிறது. கூட்டணி விவகாரம் எதிர் தரப்பில் இருக்கும் தேஜஸ்வி யாதவுக்கு சாதகமாக அமைந்து விடுமோ என ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கட்சியினர் பயத்தில் இருக்கின்றனர்.





















