Annamalai Vs Tamilisai : ”தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக போட்ட ORDER! பதறிய அ.மலை, தமிழிசை
”அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகப்போகிறார், பாஜக மாநில தலைவராக மீண்டும் தமிழிசை நியமனம் செய்யப்போகிறார் என்ற தகவல் பல இடங்களில் தீயாக பரவிய நிலையில், புதிய நடைமுறையை பாஜக அமல்படுத்தவுள்ளது”
மக்களவை தேர்தல் முடிந்த நிலையில், தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் பல இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2ஆம் இடத்தை பிடித்துள்ளது பேசுபொருளாகியிருக்கிறது. இந்நிலையில், முன்னாள் பாஜக மாநில தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் மாநில தலைமையான அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் சில கருத்துகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தார். அதே நேரத்தில் பாஜக வை சேர்ந்த கல்யாணராமன் என்பவரும் சமூக வலைதளங்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
3வது முறையாக பாஜக தொடர்ந்து ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், அவர்களுடைய முழு கவனமும் தென் மாநிலங்கள் பக்கம் திரும்பியிருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் 2026ல் அதிக அளவில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து அதற்கான காய்களை இப்போதே நகர்த்த தொடங்கியிருக்கின்றனர். அதன் வெளிப்பாடுதான், 2026 தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என சில நாட்களுக்கு முன்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது. தமிழ்நாட்டில் கட்சியை மிகப்பெரிய அளவில் வளர்க்க தலைமை முடிவெடுத்து அதற்கான முன்னெடுப்புகளை எடுக்க திட்டமிட்டிருக்கும் நிலையில், பாஜகவில் தமிழிசை உள்ளிட்டோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதும், சிலர் கோஷ்டியாக இணைந்து ஆலோசிப்பதும் டெல்லி பாஜக தேசிய தலைமையின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லியில் இருந்த அண்ணாமலையை அழைத்து தமிழக பாஜகவின் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, மாநில தலைவர்கள் யாரும் தேவையின்றி பேசக் கூடாது என்றும், செய்தியாளர் சந்திப்போ, நேர்காணல்களோ ஊடகங்களுக்கு கொடுத்தால் முறைப்படி மாநில தலைமைக்கு தகவல் தெரிவித்த பிறகே பேச வேண்டும் என அனைவருக்கும் அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் பிரஸ்மீட் வைத்தால், அது இனி திட்டமிட்ட செய்தியாளர் சந்திப்பாக மட்டுமே இருக்க வேண்டும், எது குறித்து பேசப் போகிறோம் என்பதை பாஜக தலைவர்கள் தலைமை சொன்ன பிறகே செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். அப்படி செய்தால், தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும் என்று சொன்னதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு நேற்று விமான மூலம் கோவை சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இனி செல்லும் இடங்களில் எல்லாம் செய்தியாளர்களிடம் பேச முடியாது என்றும் விமானத்தில் வரும் அந்த குறிப்பிட்ட இடைவெளியில் சில விஷயங்கள் நடந்துவிடுகிறது. அது தெரிவதில்லை. அதனால், பாஜக தலைவர்கள் இனி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினால், அது பாஜக அலுவலகத்தில் வைத்து மட்டுமே முறைப்படி பேட்டி கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகப்போகிறார், பாஜக மாநில தலைவராக மீண்டும் தமிழிசை நியமனம் செய்யப்போகிறார் என்ற தகவல் பல இடங்களில் தீயாக பரவிய நிலையில், இந்த புதிய நடைமுறையை பாஜக அமல்படுத்தவுள்ளது.