90 KM சைக்கிளிங், 21 KM ரன்னிங்! அசர வைத்த அண்ணாமலை! பூரித்து பாராட்டிய மோடி
கோவாவில் நடந்த IRON MAN போட்டியில் 1.9 கிமீ ஸ்விம்மிங், 90 கிமீ சைக்கிளிங், 21 கிமீ ரன்னிங் செய்து அசத்தியுள்ளார் அண்ணாமலை. 6 மாதமாக உழைத்த அண்ணாமலையை பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார்.
போராட்டம், பேட்டி, ஆடியோ என தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக இருந்த அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து இறங்கியதும் சைலண்ட் மோடுக்கு போனார். அதன்பிறகு விவசாயம் செய்வது, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது என தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் கோவாவில் நடைபெற்ற IRON MAN விளையாட்டுப் போட்டியில் அண்ணாமலை கலந்து கொண்டு அசத்தியுள்ளார். இந்தியாவில் இருந்து பல மாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் 1.9 கி.மீ ஸ்விம்மிங், 90 கிமீ சைக்கிளிங், 21 கிமீ ரன்னிங்கில் கலந்து கொண்டு அசத்தியுள்ளார் அண்ணாமலை. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதற்காக அண்ணாமலை 6 மாதங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டதாக பாஜக மாநில செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். எட்டரை மணி நேரத்தில் முடிக்க வேண்டிய போட்டியை அண்ணாமலை 8 மணி நேரம் 13 நிமிடங்களில் முடித்ததாக தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையுடன் சேர்ந்து எம்.பி தேஜஸ்வி சூர்யாவும் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இருவருக்கும் பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ‘கோவாவில் நடைபெற்ற iron man போட்டியில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரிப்பதை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. Fit india இயக்கத்திற்கு இது சிறந்த பங்களிப்பை கொடுக்கும். இதில் கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துகள். நமது கட்சியை சேர்ந்த 2 இளைஞர்கள் அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகரமாக முடித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என பாராட்டியுள்ளார்.
இந்த போட்டிகளில் 805 பேர் கலந்து கொண்ட நிலையில் அண்ணாமலை 755வது இடம் பிடித்துள்ளார். அதேபோல் 40-44 வயதுடைய 121 பேரில் அண்ணாமலைக்கு 114வது இடம் கிடைத்துள்ளது. 684 ஆண்கள் கலந்து கொண்ட நிலையில் அந்த வரிசையில் அண்ணாமலை 639வது இடத்தை பிடித்துள்ளார். அரசியலை தாண்டி விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வமாக இருக்கும் அண்ணாமலைக்கு பாஜகவினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.





















