ரோபோ-வின் நிறைவேறாத ஆசை! கண்கலங்கி நிற்கும் கமல்! "என்னை விட்டு போகமாட்ட”
கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர் கடைசி வரை அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே மறைந்தார். போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? என கமல் உருக்கமாக பதிவிட்டுள்ளார். ரோபோ சங்கரிடம் கமல் பேசும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் அதிலிருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்ததால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரோபோ சங்கர் சிறுவயதில் இருந்தே கமல்ஹாசனின் தீவிர ரசிகர். சினிமாவை அவரிடம் இருந்து தான் கற்றுக் கொண்டதாகவும், அவர் தான் தன்னுடைய ஆண்டவர் என்றும் பெருமையாக பேசக் கூடியவர். ஒவ்வொரு ஆண்டும் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு சென்னை முழுவதும் தவறாமல் போஸ்டர் அடித்துவிடுவார். கமல்ஹாசன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த ரோபோ சங்கர் தன்னுடைய வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் முதல் ஆளாக கமல்ஹாசனை நிறுத்திவிடுவார்.
ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் திருமண நிகழ்ச்சியிலும் கமல்ஹாசன் கலந்து கொண்டு வாழ்த்தினார். சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கருக்கு பேரன் பிறந்த நிலையில், கமல்ஹாசனை தான் பெயர் வைக்க சொன்னார். அப்போது கமல் குழந்தைக்கு “நட்சத்திரன்” என்று பெயரிட்டார்.
இந்தநிலையில் ரோபோ சங்கரின் மறைவு கமல்ஹாசனை உடைய வைத்துள்ளது. இதுதொடர்பான அவரது பதிவில், ‘ரோபோ சங்கர் ரோபோ புனைப்பெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” என வருத்தப்பட்டுள்ளார்.
கடந்த முறை மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு ரோபோ சங்கர் அவதிப்பட்ட நேரத்தில் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். கடைசியாக இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரோபோ சங்கர் கமல்ஹாசனை சந்தித்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய காட்சி ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.





















