Puri Jagannath temple Ratna Bhandar : பொக்கிஷ அறை திறப்பு! கொட்டிக் கிடக்கும் தங்கம்! மர்மம் விலகுமா?
ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகநாதர் ஆலயத்தில் உள்ள பொக்கிஷ அறை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொக்கிஷ அறை குறித்த மர்மம் விலகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக புரி ஜெகநாதர் ஆலயம் உள்ளது. அங்கு நகைகள் உள்ளிட்டவைகளை வைக்கும் பொக்கிஷ அறையின் சாவியானது காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதற்கு முன் அறையின் நிலை குறித்து ஆராய 1984ல் தொல்லியல் துறை குழு ஒன்று உள்ளே சென்றுள்ளனர். அறை மிகவும் மோசமாக இருப்பதால் அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் பொக்கிஷ அறை உள்ளே பாம்புகள் போன்ற ஆபத்தான பூச்சிகள் சூழ்ந்து அந்த பெட்டிகளை பாதுகாப்பதாகவும் தகவல்கள் உள்ளன. இந்த அறையை கடைசியாக 1985 ஆம் ஆண்டு திறக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது, புரி ஜெகநாதரின் ஆலயத்தின் கருவூல அறையின் சாவியானது, தமிழ்நாட்டை சேர்ந்த வி.கே.பாண்டியன் தமிழ்நாட்டுக்கு எடுத்து சென்றுவிட்டதாக வெளிப்படையாகப் பிரசாரங்களில் முழங்கினார். இது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்சையாக வெடித்தது.
இந்நிலையில், பொக்கிஷ அறையின் நகைகளை கணக்கிடுவதற்காக ஒடிசா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பிஸ்வநாத் ராத் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பொக்கிஷ அறையை திறக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி குழுவின் உறுப்பினர்கள் நேற்று மதியம் கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் ஊழியர்களின் உதவியுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டு பொக்கிஷ அறையை திறந்தனர். ஒடிசா பத்திரிக்கையில் வெளியாகி உள்ள செய்திகள் அடிப்படையில் பார்க்கும் போது, இங்கு மொத்தம் 2 அறைகள் உள்ளன. பிதர் பந்தர் என்பது உள்கருவூல அறையாகும். பஹார் என்பது வெளிப்புற கருவூலமாகும். பொக்கிஷ அறையில் 128 கிலோ தங்கம்; 221 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒடிசா மன்னர் கோவிலுக்கு நகைகள் தயாரிப்பதற்காக நன்கொடையாக கொடுத்த மத்தாசு தங்கம். இதில் வெளிப்புற கருவூல அறையில் 11.34 கிராம் எடையுள்ள மூன்று தங்க நெக்லஸ்கள் உள்ளன. 74 தங்க ஆபரணங்கள், உள்கருவூல அறையில் 74 தங்க ஆபரணங்கள், வைரம், பவளம், முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டுக்கள், நகைகள் உள்ளன. இதில் தங்கம், வைரம், பவளம், முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டுக்கள், நகைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 140க்கும் மேற்பட்ட வெள்ளி நகைள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பொக்கிஷ அறையில் உள்ள இரண்டு பகுதிகளில் உள்ள பெட்டிகளில் உள்ள நகைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை கணக்கெடுப்பு நடத்தும் பொழுது நகைகளை எண்ணி மதிப்பீடு செய்ய 70 நாட்கள் ஆனதாக சொல்லப்படுகிறது. தற்போது பொக்கிஷ அறையின் நிலை மோசமாக இருப்பதால், முதலில் புனரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்றும், அதன்பின்னர் பெட்டிகளை திறந்து கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்றும் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் இதர மதிப்புமிக்க பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பு நிறைந்த வேறு ஒரு அறைக்கு மாற்றப்படும். அங்கு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.