அ.தி.மு.க.விற்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற தினகரன்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு, தமிழக அரசியலிலும், அ.தி.மு.க.விலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தது. இதையடுத்து, 2017ம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்து, சசிகலா மற்றும் தினகரன் இருவரும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து, சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரின் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
தினகரன் வாபஸ்
இந்த சூழலில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அ.ம.மு.க. என்ற புதிய கட்சியை தொடங்கிவிட்டதால் இந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வழக்கை தொடர்ந்து நடத்துவதா அல்லது வாபஸ் பெறுவதா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வரும் ஏப்ரல் 9-ந் தேதி இந்த வழக்கு மீண்டும் நடைபெறும் என்று விசாரணையை ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதியே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.