பயந்து ஓடி பதுங்கிய அமைச்சர்! தவித்த மாற்றுத்திறனாளி மனைவி! இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்
நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்த போராட்டக்காரர்களால் அவரது மனைவி தீக்காயத்தால் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மற்றொரு பக்கமாக பயத்தில் விட்டு ஓடிய அமைச்சரின் மனைவியை போராட்டக்காரர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த செப்டம்பர் 5 நேபாள் அரசு சில சமூக ஊடகங்களுக்கு தடை விதித்து நேபாளை சேர்ந்த இளைஞர்களின் கோபத்திற்கு ஆளானது. அதன் விளைவாக தற்போது நேபாளத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. ஜென் சி போராட்டம் தீவிரமடைந்த நிலையில் நேபாளமே கலவரமாக மாறியுள்ளது. ஊழல், நெபோடிசம், லஞ்சம் இவற்றிற்கு எதிராக வீதிகளில் போராட்டம் செய்த மாணவர்களை போலீசார் சுட்டுக்கொன்றதால் போராட்டம் தீவிரமடைந்து பிரதமர் கே.பி சர்மா ஒலி ராஜினாமா வரை சென்றது.
கட்டுக்கடங்காத போராட்டக்காரர்கள் நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஜலனாத் கானலின் வீட்டை எரித்ததில் அவரது மனைவி அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மற்றொரு வீடியோ ஒன்று வைரலாக ஆரம்பித்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு பயந்து அமைச்சர் சரத் சிங் தலைமறைவாகியுள்ளார். அவர் மாற்றுத்திறனாளியான தனது மனைவியை தனியாக விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் போராட்டக்காரர்களே அவரே பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து அவரை தூக்கி சென்றுள்ளனர். ஒரு சிலர் மட்டுமே போராட்டத்தில் வன்முறையில் ஈடுபடுவதாகவும், அரசியல் தலைவர்களின் குடும்பத்தினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தான் போராட்டக்காரர்கள் நடந்து கொள்வதாக இந்த காட்சியை சாட்சியாக வைத்து விவாதித்து வருகின்றனர்.