”மோடி ரொம்ப மோசம் பாக். கூட விளையாடணுமா?” சுப்பிரமணியன் சுவாமி ஆவேசம் |Subramanian Swamy on Modi
ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, பாகிஸ்தானுக்கு படுதோல்வியை பரிசளித்துள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என ஒரு தரப்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும், இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தனர். இதுக்குறித்து சுப்பிரமணியன் சுவாமி மோடி இதை நிச்சயமாக அனுமதித்து இருக்க கூடாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் நடந்த தாக்குதலால் அப்பாவி மக்கள் 22 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களுக்காக தீவிரவாதிகள் தஞ்சம் அடைந்திருந்த பாகிஸ்தானில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்கள் சிதைக்கப்பட்டது. ஏராளமான தீவிரவாதிகள் பலியாகினர்.
இதன்பின்னர், போர் உருவாகும் சூழல் உண்டாகிய நிலையில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன. இதையடுத்து, பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தாவிட்டால் மேலும் பயங்கரமாக தாக்குதலை இந்தியா நடத்தும் என்றும் இந்தியா எச்சரித்தது. இந்த நிலையில், நேற்று நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று பதாகைகள் ஏந்தியுள்ளனர். சமூக வலைதளங்களிலும் பாய்காட் இந்தியா - பாக், பாய்காட் ஆசியகப், பாய்காட் இந்தியா - பாகிஸ்தான் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியது. மேலும், இந்த போட்டி நடைப்பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி, அமித்ஷாவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இன்னும் சில தரப்பினர் பகல்ஹாம் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இந்தியா இந்த போட்டியை வென்றுவிட்டது என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இதுக்குறித்து சுப்பரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில் இந்தியாவின் காஷ்மீரில் பாகிஸ்தானியர்களால் 26 திருமணமான பெண்கள் தங்கள் கணவர்கள் கொடூரமாக கொல்லப்படுவதைப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொடுமை!! ஆனால் அதைவிடக் கொடுமை என்னவென்றால், பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் கசாப்புக் கடைக்காரர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது! மோடிக்கு கொஞ்சமாவது உணர்வு இருக்கிறதா, இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கிறாறே? என மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.