நேபாளத்தின் முதல் பெண் பிரதமர்சுசிலா கார்கி பதவியேற்பு GEN Z போராட்டக்கார்கள் டிக் | Nepal PM Sushila Karki
நேபாளத்தின் இடைக்கால அரசின் தலைவராக, நேபாள பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி பொறுப்பேற்றுள்ளார். இவர் அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுயிகிறார்.
நேபாளத்தில் புரட்சி வெடித்ததையடுத்து, ஆட்சியில் இருந்தவர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, நேபாளத்தின் முழு கட்டுப்பாடு ராணுவத்திடம் வந்துள்ளது. இந்நிலையில், இடைக்கால அரசை அமைக்கும் பணிகளை ராணுவம் மேற்கொண்டுள்ளது. ஆனால், புதிய பிரதமராக யாரை நியமிப்பது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
நேபாளத்தில், இடைக்கால அரசின் தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து, அதிபர் மற்றும் ராணுவ தலைமை தளபதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜென் Z போராட்டக் குழுவினரும் பங்கேற்றனர்.இந்நிலையில், இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்க, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, காத்மாண்டு மேயர் பாலேன் ஷா மற்றும் நேபாள மின்சார வாரியத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி குல்மன் கிசிங் ஆகியோரை, ஜென் Z போராட்டக் குழுவினர் பரிந்துரைத்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், அந்த 3 பேரில் யாரை இடைக்கால பிரதமராக நியமிப்பது என்பதில் ஜென் Z குழுவினர் மத்தியில் குழப்பம் நீடித்தது. பெரும்பாலானவர்கள் குல்மன் கிசிங்குக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், சிலர் சுசீலாவை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதனால், இடைக்கால அரசு அமைப்பதில் அங்கு இழுபறி நீடித்து வந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, ஓரிரு நாட்களில் இடைக்கால புதிய பிரதமர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடைக்கால அரசின் தலைராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டு, அவர் நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றுள்ளார்