கடும் கோபத்தில் EPS! CPR-ஐ வைத்து Game Starts! அமித்ஷாவுக்கு மறைமுக மெசேஜ்
அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததால் கோபமான இபிஎஸ், டெல்லி தலைமையில் இருந்து எத்தனையோ அழைப்பு வந்தும் அதனை கண்டுகொள்ளாமல் ஓரங்கட்டி வந்ததாக சொல்கின்றனர். அதனால் சிபி ராதாகிருஷ்ணனை வைத்து இபிஎஸ்-ஐ டெல்லிக்கு வரவைக்கும் முடிவை கையில் எடுத்தது பாஜக. என்ன ஆனாலும் ஓபிஎஸ்-ஐ கட்சிக்குள் சேர்க்க மாட்டேன் என்பதை தெளிவாக சொல்லும்படி டெல்லிக்கு கிளம்புவதற்கு முன்பே மறைமுக மெசேஜ் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார் இபிஎஸ்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அந்த மனநிலையில் உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவோம் என காலக்கெடு விதித்து பரபரப்பை கிளப்பினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இபிஎஸ் வழிக்கு வருவார் என செங்கோட்டையன் எதிர்பார்த்த நேரத்தில் அதற்கு மாறாக அவரின் கட்சிப் பதவிகளை பறித்தார் இபிஎஸ். அடுத்த சில நாட்களிலேயே டெல்லி பறந்த செங்கோட்டையன் அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினார். அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக அமித்ஷாவிடம் பேசியதாக ஓபனாகவே சொன்னார்.
இந்த சந்திப்பால் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்கின்றனர். அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், தன்னிடம் எதுவும் கேட்காமல் செங்கோட்டையனை பாஜக தலைமை டெல்லிக்கு அழைத்து பேசியது இபிஎஸ்-க்கு ஆத்திரத்தை கிளப்பியிருக்கிறது. ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணி அமைந்த போது செங்கோட்டையன் தனியாக சென்று அமித்ஷா, நிர்மலாவை சந்தித்தது இபிஎஸ்-க்கு அதிருப்தியை கொடுத்தது. தற்போது செங்கோட்டையன் தலைமைக்கு எதிராகவே குரல் கொடுத்திருக்கும் போது செங்கோட்டையனை சந்தித்ததால் இபிஎஸ் பாஜக தலைமையை ஓரங்கட்ட ஆரம்பித்ததாக பேச்சு அடிபடுகிறது.
இபிஎஸ்-ஐ டெல்லி வரவழைக்க பாஜக தலைமை எவ்வளவோ முயற்சித்தும் இபிஎஸ் அதனை கண்டுகொள்ளவில்லை. அதனால் கடைசியாக சிபி ராதாகிருஷ்ணனை வைத்து பாஜக காய் நகர்த்தியுள்ளதாக சொல்கின்றனர். இபிஎஸ்-ஐ தொடர்பு கொண்ட சிபி ராதாகிருஷ்ணன், நான் பதவியேற்றதில் இருந்து நீங்கள் வரவே இல்லை, டெல்லிக்கு உடனே வாங்க என அழைப்பு விடுத்துள்ளார். தமிழராகவும், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிகுந்தவராகவும் இருக்கும் சிபி ராதாகிருஷ்ணனின் பேச்சை தட்ட விரும்பாத இபிஎஸ் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்துவிட்டு டெல்லிக்கு பறந்துள்ளார்.
இதோடு சேர்த்து அமைச்சர் அமித்ஷாவையும் இபிஎஸ் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டெல்லிக்கு கிளம்புவதற்கு முன்பே ஓபிஎஸ்,டிடிவியை கட்சிக்குள் சேர்க்கும் எண்ணம் துளி கூட கிடையாது என்ற மெசேஜை டெல்லிக்கு அனுப்பும் வகையில் பேசியிருக்கிறார் இபிஎஸ். ”என்னையோ அதிமுகவையோ எதுவும் செய்ய முடியாது. ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் தான் முக்கியம். சில பேரை கைக்கூலிகளாக வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறார்கள். தலைமை கழகத்தை அடித்து நொறுக்கியவர்களை கட்சியில் சேர்க்க வேண்டுமா? இன்னொருவர் 18 எம்.எல்.ஏக்களை கடத்தி சென்றவர். அவரை சேர்க்க வேண்டுமா? யாரும் என்னை மிரட்டி பார்க்க முடியாது” என ஆவேசமாக பேசியுள்ளார் இபிஎஸ்.
செங்கோட்டையன் விவகாரத்தில் இத்தனை நாட்களாக சைலண்டாக இருந்த இபிஎஸ் டெல்லி செல்லும் போது இதுபற்றி பேசியிருப்பது டெல்லிக்கு அனுப்பும் மெசேஜ் என சொல்கின்றனர்.