கனமழையால் விழுந்த சுற்றுச்சுவர்.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்! வைரலாகும் சிசிடிவி காட்சி! | Caught On Camera
கனமழையால் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் பெண்மணி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜார்க்கண்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த கன மழை பெய்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் தலைநகர் ராஞ்சியில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. காலை 8.30 மணி முதல் 24 மணி நேரத்திற்கு 40.8 மிமீ மழை பெய்ததாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் மாநிலம் முழுவதும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
பலத்த காற்றுடன் மழை பெய்வதால் மக்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை கனமழை பெய்து கொண்டு இருக்கும் போது மழைநீர் தேங்கிய தெருவில் பெண்மணி ஒருவர் குடை பிடித்தவாறு நடந்து வந்தார். அப்போது திடீரென அங்கிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அந்த பெண் நூலிழையில் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இந்த காட்சிகள் அருகில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.