டம்மியான செங்கோட்டையன்? ப்ளானை தவிடுபொடியாக்கிய EPS! கொங்கு நிலவரம் என்ன?
காலக்கெடு விதித்து அதிரடி காட்டலாம் என கணக்கு போட்ட செங்கோட்டையனை இபிஎஸ் கண்டு கொள்ளததால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று, இதற்கு சும்மாவே இருந்திருக்கலாம் என செங்கோட்டையன் நொந்து போய் இருப்பதாக சொல்கின்றனர். PRESSMEET-க்கு பிறகு கொங்கு வட்டாரத்திலேயே செங்கோட்டையனுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
தில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, தினகரன், ஒபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த மனநிலையில் உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவோம் என கடந்த செப்டம்பர் 5ம் தேதி PRESSMEET வைத்து காலக்கெடு விதித்தார்.
அவர் சொன்ன 10 நாட்கள் இன்றுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு வந்த செங்கோட்டையனிடம் காலக்கெடு பற்றி கேள்வி கேட்ட போது, என்னைப் பொறுத்தவரை இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் இணைய வேண்டும். வெற்றி என்ற இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான். இதுதான் எனது ஆசை. இன்னும் ஒரு மாதத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” சாஃப்ட்டாக சொல்லிவிட்டு நகர்ந்தார்.
காலக்கெடு விதித்த பிறகு இபிஎஸ் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்த்த செங்கோட்டையனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனின் பதவியை பறித்தார் இபிஎஸ். கழக அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி உத்தரவிட்டார். அதேபோல் செங்கோட்டையனுக்கு நினைத்த அளவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. கட்சியின் முக்கிய புள்ளிகளே இபிஎஸ் பக்கம் நின்றதால் செங்கோட்டையன் தனித்து விடப்பட்டார்.
கொங்கு மண்டலத்திலேயே செங்கோட்டையனுக்கு செல்வாக்கு இல்லாமல் போனது. கோபிசெட்டிபாளையத்தை தவிர மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் யாரும் செங்கோட்டையனை சந்திக்க கூட வரவில்லை என சொல்கின்றனர். சசிகலா, ஓபிஎஸ், டிடிவி ஆதரவாளர்கள் தான் செங்கோட்டையனுக்கு பக்கபலமாக நின்றனர். அதனால் அவர்கள்தான் அடுத்தடுத்து செங்கோட்டையனை சந்திக்க வந்ததாகவும், வேறு யாரும் அந்த பக்கமே வரவில்லை என்றும் பேச்சு அடிபடுகிறது.
செங்கோட்டையன் வகித்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை எம் எல் ஏ ஏ.கே.செல்வராஜிடம் ஒப்படைத்தார் இபிஎஸ். அதன்பிறகு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அவரது பக்கம் திடீர் பல்டி அடிக்க ஆரம்பித்தனர். கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர் சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் செல்வராஜை நேரில் சந்தித்து பேசினர். செங்கோட்டையனின் ஆதரவாளர் என கூறப்படும் பவானிசாகர் தொகுதி எம்.எல்.எ. பண்ணாரியும் செல்வராஜை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நாங்கள் எப்போதும் இபிஎஸ் பக்கம் தான் என்பதை தெளிவாக சொல்லிவிட்டார்.
இப்படு ஈரோடு அதிமுக வட்டாரத்திலேயே நிலைமை செங்கோட்டையனின் கைகளை மீறி சென்றுள்ளது. செங்கோட்டையனுக்கு ஆதரவாக இருந்தவர்கள் கூட இன்னும் சில நாட்களில் இபிஎஸ்-ஐ சந்தித்து அந்தப் பக்கம் சாய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. காலக்கெடு விதித்து பலத்தை காட்டலாம், இபிஎஸ்-ஐ வழிக்கு கொண்டு வரலாம் என நினைத்த செங்கோட்டையனின் ப்ளான் தலைகீழாக மாறி அவருக்கே நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.