Sushila Karki : நேபாளின் அடுத்த பிரதமர்?ரேஸில் இந்திய மாணவி..யார் இந்த சுசீலா கார்கி!

நேபாளத்தில் ஜென் சி போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்ததை அடுத்து, நேபாளின் இடைக்கால பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ரேஸில் மேயர் பாலேந்திர ஷா, சுசிலா கார்கி, குல்மான் கீசிங் ஆகியோர் உள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்த லிஸ்டில் உள்ள சுசிலா கார்கிக்கு இந்தியாவுடன் பால்ய கால தொடர்பு உள்ளது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 5 நேபாள் அரசு சில சமூக ஊடகங்களுக்கு தடை விதித்து நேபாளை சேர்ந்த இளைஞர்களின் கோபத்திற்கு ஆளானது. அதன் விளைவாக தற்போது நேபாளத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது..

ஊழல், நெபோடிசம், லஞ்சம் இவற்றிற்கு எதிராக வீதிகளில் போராட்டம் செய்த மாணவர்களை போலீசார் சுட்டுக்கொன்றதால் ஜென் சி எனும் இளம்தலைமுறையினர் வன்முறையில் இறங்கினர்.. இதன் விளைவாக நேபாள் பிரதமர் கேபி சர்மா ஒலி ராஜினாமா செய்தார். 

இந்நிலையில் நேபாலின் இடைக்கால பிரதமர் யார் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து நேபால் ஜென் சி போராட்டக்காரர்களின் ஒற்றை நம்பிக்கையாக திகழ்கிறார் சுசிலா கார்கி..இவரை நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நியமனம் செய்யக்கோரி ஜென் சிகள் முழக்கமிட்டு வருகின்றனர். இந்நிலையில் யார் இந்த சுசிலா கார்கி இவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்பதை காணலாம்..

சுசிலா கார்கி தற்போது உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சுசிலா. கடந்த ஜூலை 2016 முதல் ஜுன் 2017 வரை தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். ஊழலை கடுமையாக எதிர்த்தவர் சுசிலா.
கார்கி 1952 ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று நேபாளத்தில் உள்ள பிரத்நகரில் பிறந்தார். இவரது பெற்றோருக்கு 7 குழந்தைகள்..அதில் மூத்தவர் சுசிலா கார்கி. 

கார்க்கி 1972 ஆம் ஆண்டு மகேந்திர மோராங் வளாகத்தில் இளங்கலைப் பட்டமும், 1975 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 
பின்னர் 1978 ஆம் ஆண்டு திரிபுவன் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

பிரத்நகரில் சட்டப்படிப்பை முடித்த பிறகு 1979 ஆம் ஆண்டு தனது சட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். 2007 ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞரானார்.பின்னர் ஜனவரி 2009 இல் உச்ச நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டார், 2010 இல் நிரந்தர நீதிபதியானார்.

2017 ஏப்ரலில் ஆளும் நேபாளி காங்கிரஸ் மற்றும் சிபிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் சுசிலாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்தனர். இதனையடுத்து அடுத்து, அவர் ஒரு பாரபட்சமான தீர்ப்பை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு,அவர் தற்காலிகமாக தலைமை நீதிபதியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தியா குறித்து பேசிய சுசிலா..உத்தரபிரதேசத்தில் உள்ள இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தையும் அங்கு தான் படித்த நாட்களையும் தனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்றும் நினைவில் இருப்பதாக குறிப்பிட்டார்..மேலும் கல்லூரி நாட்களில் கங்கை நதிக்கரையோரம் உள்ள தனது விடுதியில், கோடை இரவில் மொட்டைமாடியில் தூங்கும் நாட்களையும் தான் இன்னும் நினைத்து மகிழ்வதாக பெருமிதம் கொண்டார்.

மேலும் இந்திய அரசியல் தலைவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவர்கள் சகோதர சகோதரி போன்றவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார் சுசிலா..

சுசிலா கார்கிக்கு தான் தற்போது நேபால ஜென்சி போராட்டகாரர்கள் முழு ஆதரவு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. எனினும் மேயர் பாலேந்திர ஷா மற்றும் நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் குல்மன் கீசிங் ஆகியோரும் இடைக்கால பிரதமர் ரேஸில் இருப்பதால் யார் அந்த பதவியை கைப்பற்ற போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola