Naam tamilar seeman : அங்கீகரிக்கப்பட்ட கட்சி! சாதித்த நாம் தமிழர்! வாக்கு சதவீதம் என்ன? |
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் களமிறங்கிய நாம் தமிழர் கட்சி 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிக்கான அந்தஸ்தை பெற்றது.
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவியது. மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்த நிலையில், நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் 39 தொகுதிகளிலும் தனித்து களம் கண்டது. ஆனால் நாம் தமிழர் கட்சியால் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கான அந்தஸ்தை பெற முடியாமல் இருந்தது.
தேர்தல் நேரத்தில் சின்னம் விவகாரமும் பூதாகரமாக வெடித்தது. கடந்த முறை கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழரால் இந்த முறை அந்த சின்னத்தை வாங்க முடியவில்லை. சீமான் தொடர்ந்து முயற்சித்தும் கரும்பு விவசாயி சின்னம் கைவிட்டு போனது. அதன்பிறகு தேர்தல் ஆணையத்தால் மைக் சின்னம் வழங்கப்பட்டது. குறுகிய காலத்தில் மைக் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய சூழல் சீமானுக்கு இருந்தது. தொடர் பிரச்சாரம் மூலம் அது சாத்தியமும் ஆனது.
ஒரு மாநில கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்க வேண்டுமென்றால் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அந்தவகையில் மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையை இந்த மக்களவை தேர்தலில் பூர்த்தி செய்துள்ளது நாம் தமிழர்.
5 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நாம் தமிழர், சில தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பிடித்து அசத்தியுள்ளது. 8.19% வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக உருவெடுத்துள்ளது. கூட்டணி இல்லாமல் தொடர்ந்து தனித்து களம் கண்டு சீமானின் முயற்சியால் நாம் தமிழர் இந்த நிலையை அடைந்துள்ளதாக அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.