Mamata banerjee : ஆட்சியமைக்குமா I.N.D.I.A? என்ன செய்யப்போகிறார் மம்தா? ராகுலுக்கு அனுப்பிய மெசேஜ்
மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்தியா கூட்டணியினர் என்ன முடிவெடுக்கப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மிக முக்கியமாக மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் நிலைப்பாடு தொடர்பாகவும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவர் இந்தியா கூட்டணி தொடர்பாகவும் பேசிய விஷயங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு மாறாக தேர்தல் முடிவுகளில் பல்வேறு திருப்பங்கள் உள்ளன. இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பாஜக மட்டும் தனியாக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில கட்சிகள் வெற்றியை தட்டிச் சென்றுள்ளன.
மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 29 தொகுதிகள் திரிணாமுல் காங்கிரஸ் வசமும், பாஜகவிடம் 12 தொகுதிகளும் காங்கிரஸிடம் 1 தொகுதியும் சென்றுள்ளன. மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸுடன் ஏற்பட்ட மோதலால் அனைத்து தொகுதிகளிலும் தனித்து களமிறங்கிய மம்தா பானர்ஜி, 29 தொகுதிகளில் வென்று அசத்தியுள்ளார்.
இந்தநிலையில் இந்தியா கூட்டணிக்கு அவரது ஆதரவு இருக்கிறதா என்ற விவாதம் எழுந்தது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணியின் பக்கமே இருப்பதாகவும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு உதவுவேன் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு சேர்த்து தொகுதி பங்கீடு தொடர்பாகவும், காங்கிரஸ் தொடர்பாகவும் அவர் பேசிய கருத்துகள் மீண்டும் மோதலை பற்றவைக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு 2 இடம் கொடுக்க தயாராக இருந்ததாகவும், தேர்தல் முடிவுகளை பார்த்தால் அவர் எடுத்த முடிவு சரியாக இருக்கிறது என காங்கிரஸுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். மேலும் ராகுல்காந்தி தொடர்பாக பேசிய அவர், “நான் ராகுல்காந்திக்கு மெசேஜ் அனுப்பினேன். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. ஒருவேளை தேர்தல் முடிவுகளில் பிஸியாக இருக்கலாம். அவர்கள் என்னை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை, ஒருவேளை தொடர்பு கொள்ளவில்லையென்றாலும் நான் அதைபற்றி கவலைப்பட மாட்டேன்” என கூறியுள்ளார். மேலும் ஆட்சியமைப்பது தொடர்பாக இந்தியா கூட்டணி நடத்தும் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக கட்சியின் பொதுசெயலாளர் அபிஷேக் பானர்ஜி செல்வார் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவு இருப்பதாக மம்தா பானர்ஜி உறுதி செய்திருந்தாலும், காங்கிரஸ் தொடர்பாக அவர் பேசிய கருத்துகள் விமர்சனத்திலும் சிக்கியுள்ளது. அதிகமான தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வென்றுள்ள நிலையில், மம்தா பானர்ஜியுடன் இணக்கமான உறவை வைத்திருக்கவே காங்கிரஸும் முடிவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.