நம் முன்னோர்களின் உணவின் பெருமை பற்றி அரிய வாருங்கள்..தஞ்சாவூர் உணவு அருங்காட்சியகத்திற்கு..!
இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய உணவுக்கழகம் சார்பில் தஞ்சாவூரில் உணவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: நம் முன்னோர்களின் வாழ்க்கை சிறப்பானதாக அமைய உணவின் மூலம் அவர்கள் பெற்றிருந்த தூய சிந்தனை, செயலில் சிரத்தை, சுறுசுறுப்பு போன்றவை இப்போதைய நவீன கலாச்சாரம், அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றில் ஊறியுள்ள இளம் தலைமுறைக்கு இருக்கிறதா என்றால்... கேள்விக்குறிதான் மிஞ்சி நிற்கும்.
செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பார்கள். வாய்க்கும் ஓய்வு தேவை என்ற எண்ணத்தை கொண்டிருந்த முன் சந்ததியினர் காலை, மாலை ஆகிய இரண்டு வேளை சத்தான உணவை உட்கொண்டனர். அதிலும் தேசம் அதாவது தாம் வாழ்ந்த சூழ்நிலை, பண்பு, கலாச்சாரம், நிலத்தின் தன்மை ஆகியவற்றிற்கு உகந்த வகையில் உணவை சாப்பிட்டனர். இப்போது காலமே மாறிவிட்டது. சத்தான உணவு எது என்பதை நம் இளைய தலைமுறையினர் உணர வேண்டும்.
அந்த வகையில் இளைய தலைமுறையினர், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அருமையான உணவுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய உணவுக்கழகம் சார்பில் தஞ்சாவூரில் உணவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
நெல் நாற்று விடுவது தொடங்கி அரிசியாக பொதுமக்களுக்கு கிடைப்பது வரையிலான காட்சிகளை மெழுகு மற்றும் மரப் பொருள்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். தஞ்சாவூர்- புதுக்கோட்டை சாலை நிர்மலா நகரில் இந்திய உணவுக் கழக மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
அதில் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் உணவு தேவைக்காக வேட்டையாடியது தொடங்கி இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, எகிப்து போன்ற பல நாடுகளில் விவசாயிகள் உணவு தயாரிப்பதற்கான பொருள்களை விளைவிக்கப் பயன்படுத்தப்பட்ட உழவு கலப்பைகள், தானியங்களைப் பாதுக்காக்க அமைக்கப்பட்ட களஞ்சியங்கள், உணவைத் தாக்கும் பூச்சி வகைகள் உள்ளிட்ட பலவற்றை மெழுகு மற்றும் மரப்பொருள்களின் மூலம் டிஜிட்டல் முறையில் வடிவமைத்து பார்வைக்கு வைத்துள்ளனர்.
திங்கள் முதல் சனி வரை காலை 10 மணி முதல் மாலை 5 வரை இதைர அனைவரும் பார்வையிடலாம். 13 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதன் தனக்கான உணவை எப்படி சேகரித்தான், காலப்போக்கில் வேளாண்மை எப்படி, எப்போது உருவானது என்பதை விளக்கும் 8 நிமிடம் காணொலி ப்ரொஜெக்டர் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
உலக நாடுகளில் மனிதர்கள் உணவை எப்படி சேகரித்தனர். உணவை தாக்கும் பூச்சிகள் ஆகியவற்றை தொடு திரை மூலமாக நாம் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்தியாவில் உள்ள மாநிலங்களை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாநிலத்தை தொடு திரை மூலமாக தொடும் போது அம்மாநில இரண்டு உணவுகளும் அதை செய்யும் முறைகளையும் திரையில் தோன்றுகிறது.
நெற்பயிர்கள் நடவு செய்யும் முறை முதல் அது மக்களிடம் போய் சேரும் வரை நேரடி காட்சிகளை 3D தொழில்நுட்பத்திறன் மூலம் பார்ப்பதால் நாமே அந்த களத்தில் நின்று பார்ப்பது போன்ற உணர்வை பெறலாம். மாணவர்களுக்காக வேளாண்மை பற்றிய கேள்விகளை வினாடி-வினா மூலம் திரையில் பார்த்து பட்டன்கள் மூலம் பதிலளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவு அருங்காட்சியகம் கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. முழுவதும் டிஜிட்டல் முறையில் மாணவர்கள் உட்பட அனைவரும் வந்து பார்த்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. செல்வோம். பார்ப்போம். உணர்வோம். உடல் நலத்தை காப்போம்.