நவக்கிரக கோயில்களுக்கு பக்தர்களை அழைத்து செல்ல சிறப்பு சுற்றுலா பேருந்து - எப்போது தொடக்கம்? முழு தகவல் இதோ
தஞ்சாவூர் மாவட்டத்தில் நவக்கிரக கோயில்களுக்கு பக்தர்களை அழைத்து செல்ல சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நவக்கிரக கோயில்களுக்கு பக்தர்களை அழைத்து செல்ல சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 9 நவக்கிரக கோவில்களுக்கும் சிறப்பு சுற்றுலா பேருந்து 01.04.2024 முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு சார்பில் கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவக்கிரக ஸ்தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் வகையில் நவக்கிரக சிறப்பு பேருந்து இயக்கம் துவங்கப்பட்டது. இது பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு பயணக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ. 750 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்பட்ட சிறப்பு சுற்றுலா பேருந்து வரும் 07.03.2024 முதல் கூடுதலாக அனைத்து வியாழக் கிழமைகளிலும் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்கு பொது மக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் மற்றும் வாரம் முழுவதும் பேருந்துகளை இயக்கி பொது மக்களுக்கு உதவிட வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டது.
முதலமைச்சர் உத்தரவின்படி 01.04.2024 முதல் வாரத்தில் 7 நாட்களும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் சார்பில் கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நவக்கிரக சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கப்பட உள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்கள்.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இயக்கக் கூடிய 5 நாட்கள் காலை 5 மணிக்கு கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்தில் புறப்பட்டு நவக்கிரக கோவில்களுக்கும் பயணிகளுடன் சென்று இரவு 8 மணிக்கு மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்து அடையும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களில் மட்டும் மார்ச் மாதம் முழுவதும் அதிகாலை 6 மணிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு இயக்கப்படும்.
ஏப்ரல் 1ம் தேதி முதல் பயணிகள் வசதிக்காக வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5 மணிக்கு (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட) கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். நவக்கிரக சிறப்பு பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் உள்ள பயணிகள் கீழ்கண்ட இணையதள முகவரியில் முன்பதிவு செய்து தங்களது பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
எவ்வித சிரமமின்றி பயணிக்க www.tnstc.in (Mobile App) Android,I phone கைபேசி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணிகள் நவக்கிரக சுற்றுலா பேருந்து வசதியை இணையத்தளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள இயலும். நேரடியாக பேருந்தில் பயண சீட்டு பெற்றுக் கொள்ள இயலாது, பயணிகள் நவக்கிரக சுற்றுலா பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம்.