வேறலெவல் அனுபவம்...புதுச்சேரியில் இப்படி ஒரு இடமா? இயற்கை அழகை ரசித்த படியே படகு சவாரி... !
சதுப்பு நிலக் காடுகளில் சுற்றிலும் மரங்களுக்கு இடையில் வன பறவைகளின் கீச்சிடும் அழகிய சத்தத்துடன் பயணம் செய்வது அலாதி இன்பமாக இருக்கும்.

புதுச்சேரியில் மினி மாங்குரோவ் காடு
சதுப்பு நிலக்காடுகள் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பிச்சாரவரம் காடுகள் தான். ஆனால் சென்னைக்கு அருகில் அமைந்துள்ள புதுச்சேரியில் மினி மாங்குரோவ் காடு உள்ளது என்பது பலருக்கு தெரியாது, வழக்கமாக புதுச்சேரிக்கு சுற்றுலா செல்பவர்கள் பீச், மியூசியம், ஆரோவில், தேவாலயம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில் போன்ற இடங்களுக்கு சென்று விட்டு திரும்பி விடுவார்கள்.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக் காடான பிச்சாவரம், சிதம்பரத்திற்கு அருகில் உள்ளது. ஆனால் இதற்கே டஃப் கொடுப்பது போல் அவ்வளவு அழகு நிறைந்த மினி மாங்குரோவ் காடுகள் புதுச்சேரியில் உள்ளது. புதுச்சேரியில் பலருக்கும் தெரியாத கிட்டதட்ட பிச்சாவரத்துக்கு இணையான சதுப்பு நிலக்காடு உள்ளது.
படகு சவாரி செய்தபடியே சுற்றி உள்ள இயற்கை அழகை ரசிக்கலாம்
பிரெஞ்சு ஆளுமையின் கீழ் இருந்த புதுச்சேரியின் முருங்கப்பாக்கம் ஆறு மற்றும் கடல் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள மாங்குரோவ் காடு அட்வென்ச்சர் விரும்பிகள் தவறவே விடக் கூடாத ஒரு இடம். பிச்சாவரம் செல்ல முடியாதவர்கள் இந்த மினி மாங்குரோவ் காட்டிற்கு சென்று படகு சவாரி செய்தபடியே சுற்றி உள்ள இயற்கை அழகை ரசிக்கலாம்.
வலைதளத்தில் கடலூர் சாலையில் முருங்கபாக்கம் கைவினை கிரமாம் Art and Craft Village என தேடினால் இந்த இடத்தை அடையலாம். பெயருக்கு ஏற்ப, கைவினை பொருள் கலைகளின் கிராமமாக இந்த பகுதி திகழ்கிறது. இங்குள்ள கைவினை பொருட்கள் கண்காட்சி மையத்தில் கார், பைக் போன்றவற்றை நிறுத்த வசதி உள்ளது. அங்கிருந்து நடந்தால் கைவினைப் பொருட்கள் கடைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை கடந்து சென்றால் போட் ஹவுஸ் உள்ளது. அங்கே டிக்கெட் எடுத்துக் கொண்டு படகில் சவாரியை துவங்கலாம்.
சதுப்பு நிலக் காடுகளில் சுற்றிலும் மரங்களுக்கு இடையில் வன பறவைகளின் கீச்சிடும் அழகிய சத்ததுடன் பயணம் செய்வது அலாதி இன்பமாக இருக்கும். அரிக்கமேடு மீன்பிடி துறைமுகம் வழியாக சென்று கடலையும் நதியையும் இணைக்கும் ரிவர் மவுத் பகுதி ஆகிய இடங்களை படகில் அமர்ந்தபடியே சுற்றி வரலாம். சுமார் ஒன்றரை மணி நேரம் வரை காட்டுக்குள் சென்று வரும் இந்த அட்வென்ச்சர் பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ.500 முதல் 700 வரை வசூலிக்கிறார்கள். சதுப்பு நிலக் காடுகளுக்குள் படகில் பயணிக்கும் அனுபவம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இயற்கை அழகை ரசித்த படியே இங்கு உணவு உண்ணும் வாய்ப்பு வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது
சதுப்பு நிலக்காடுகளை பார்த்து விட்டு திரும்பும் வழியில் உணவகம் ஒன்றில் படகை நிறுத்துகிறார்கள். சுற்றிலும் தண்ணீர், நடுவில் தான் இந்த உணவகமே உள்ளது. இயற்கை அழகை ரசித்த படியே இங்கு உணவு உண்ணும் வாய்ப்பு வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது. அங்கேயே தங்குவதற்கான அறைகளும் அமைப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகத்திற்கு அருகே ஸ்க்யூபா டைவிங்கும் உள்ளது. படகில் செல்பவர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உடை வழங்கப்படுகிறது. புதுச்சேரிக்கு சென்னையில் இருந்து ஒரு நாள் டிரிப் பிளான் செய்பவர்கள், கோடை விடுமுறைக்கு செல்ல திட்டமிடுபவர்கள் இங்கு சென்று விட்டு வரலாம்.





















