பெங்களூரு-மும்பை ரயில் பயணம் இனி 18 மணி நேரத்தில்! டுரோண்டோ எக்ஸ்பிரஸ்: காத்திருப்பு எப்போது?
பெங்களுரு – மும்பை இடையிலான ரயில் பயண நேரத்தை குறைக்கும் வகையில், "டுரோண்டோ எக்ஸ்பிரஸ்" ரயிலை இயக்குவது குறித்து ரயில்வே நிர்வாகம் ஆலோசனை.
பெங்களுரு – மும்பை இடையிலான ரயில் பயண நேரத்தை குறைக்கும் வகையில், "டுரோண்டோ எக்ஸ்பிரஸ்" ரயிலை இயக்குவது குறித்து ரயில்வே நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முன்மொழிவு, சமீபத்தில் அனுமதி பெற்ற இருவாரத்திற்கு ஒருமுறை இயக்கப்படவிருந்த “சூப்பர்ஃபாஸ்ட்” ரயிலுக்கு பின்னர் முன்வைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே வாரியம் கடந்த டிசம்பர் 9, 2025 அன்று, 16553 / 16554 – எஸ்எம்விடி பெங்களூரு – எல்டிடி மும்பை சூப்பர்ஃபாஸ்ட் ரயில் சேவையை அறிவித்தது. இந்த ரயில், சுமார் 1,209 கி.மீ தூரத்தை 24 மணி நேரத்தில் கடக்கவிருந்தது. ஆனால், இது ஏற்கனவே இயக்கத்தில் உள்ள உத்யான் எக்ஸ்பிரஸ்-ஐவிட மெதுவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
அறிவிக்கப்பட்ட சூப்பர் ஃபாஸ்ட் ரயில் விவரங்கள்
16553
எஸ்எம்விடி பெங்களூருவில் இருந்து: செவ்வாய், சனி – இரவு 8.35மும்பை எல்டிடி வருகை: அடுத்த நாள் இரவு 8.40
16554 (திரும்பும் சேவை)
மும்பை எல்டிடி புறப்பாடு: ஞாயிறு, புதன் – இரவு 11.15, எஸ்எம்விடி பெங்களூரு வருகை: அடுத்த நாள் இரவு 10.30 இந்த ரயில் 14 நிறுத்தங்களுடன், 17 எல்எச்பி பெட்டிகளுடன் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. முக்கிய பராமரிப்பு மையம் எஸ்எம்விடி பெங்களூருவில் அமைக்கப்படவிருந்தது. இந்த நீண்ட பயண நேரம் குறித்த விமர்சனங்களைத் தொடர்ந்து, கேஎஸ்ஆர் பெங்களூரு – சிஎஸ்எம்டி மும்பை இடையே டுரோண்டோ எக்ஸ்பிரஸ் இயக்குவது குறித்து ரயில்வே வாரியம் பரிசீலித்து வருகிறது. இந்த ரயில், துமகூர் – தாவணகெரே – ஹுப்பள்ளி – பெலகாவி – மிராஜ் – புனே வழியாக இயக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த சேவைக்காக இரண்டு ரேக்குகள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. பராமரிப்பு மையம் கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருக்கும்.
டுரோண்டோ ரயிலின் தற்காலிக நேர அட்டவணை
கேஎஸ்ஆர் பெங்களூரு புறப்பாடு – மாலை 4.30
மும்பை சிஎஸ்எம்டி வருகை – அடுத்த நாள் காலை 10.30
திரும்பும் சேவை
மும்பை புறப்பாடு – பிற்பகல் 3.00
பெங்களுரு வருகை – காலை 9.30
இதன் மூலம், பெங்களுரு – மும்பை பயணம் சுமார் 18 மணி நேரத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே அதிகாரி ஒருவரின் விளக்கமாக இதுகுறித்து பெங்களுரு ரயில்வே டுரோண்டோ ரயில் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், முன்பு அறிவிக்கப்பட்ட இருவார சூப்பர்ஃபாஸ்ட் ரயில் சேவையும் ரத்து செய்யப்படவில்லை, பின்னர் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் கூறினார்.
டுரோண்டோ எக்ஸ்பிரஸ் சிறப்பம்சங்கள்
கட்டணத்தில் உணவு சேர்க்கப்பட்டிருக்கும், டைனமிக் கட்டண முறை, 3AC பயணக் கட்டணம் (தோராயமாக): ரூ. 2,500 ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். மொத்தத்தில், பெங்களுரு – மும்பை இடையிலான ரயில் பயணத்தை குறைந்த நேரத்தில் முடிக்க, டுரோண்டோ எக்ஸ்பிரஸ் ஒரு முக்கிய மாற்றமாக அமையலாம். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, இந்த திட்டம் ஆலோசனை நிலைமையில் மட்டுமே உள்ளது.





















