Aditya L1 Launch: ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவுவதை நேரில் பார்க்க ஆசையா?.. நீங்கள் செய்யவேண்டியது இதுதான்
ஆதித்யா எல்.1 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதை நேரில் காண்பதற்கு, எப்படி முன்பதிவு செய்ய வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஆதித்யா எல்.1 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதை நேரில் காண்பதற்கு, எப்படி முன்பதிவு செய்ய வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஆதித்யா எல்1 விண்கலம்:
பார் போற்றும் வகையில் இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தை ஆராய தொடங்கியுள்ளது. இதைதொடர்ந்து அடுத்த இலக்காக சூரியனை ஆராயும் நோக்கில், ஆதித்யா எல்1 விண்கலம் செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, வரும் சனிக்கிழமை காலை 11.50 மணியளவில் ஆதித்யா எல்1 செயற்கைகோளை சுமந்துகொண்டு, பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
பொதுமக்களுக்கு அனுமதி:
சூரியனை ஆராய்வதற்கு என இதுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே பிரத்யேக செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளன. அந்த வரிசையில் சூரியனை ஆராய்வதற்காக பிரத்யேக செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் நாடு எனும் பெருமையை, ஆதித்யா எல்1 மூலம் இந்தியா பெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை பொதுமக்களும் நேரடியாக ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வந்து காண அனுமதி அளிக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, முன்பதிவு செய்த நபர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி - சி57 ராக்கெட் விண்ணில் செலுத்தபடுவதை, அங்குள்ள லான்ச் வியூ கேலரியில் இருந்து கண்டுகளிக்கலாம்.
முன்பதிவு எப்படி?
விருப்பமுள்ள நபர்கள் ராக்கெட் ஏவுவதை நேரில் காண்பதற்கு எப்படி முன்பதிவு செய்யலாம் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,
- .இஸ்ரோவின் அதிகாரப்பூர்வத் தளமான https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
- ஆதார் கார்டு அல்லது அரசு அங்கீகரித்த இதர அடையாள அட்டை மற்றும் செல்போன் எண்ணை தயாராக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
- இணையத்தில் Register பக்கத்தில் தேவையான தரவுகளை பதிவிட்டு அமைதிச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். ஒரு அனுமதிச்சீட்டில் 2 பேர் வரை பதிவு செய்துகொள்ளலாம். இந்த முன்பதிவு இன்று நண்பகல் 12 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆதித்யா நோக்கம் என்ன?
பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் தான் சூரியன். அதன்படி, சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் என்பது 150 மில்லியன் கிலோ மீட்டர்கள் ஆகும். அதாவது 15 கோடி கிலோ மீட்டர் தூரமாகும். இந்த இலக்கை அடையும் அளவிலான அதிநவீன தொழில்நுட்பம் என்பது இதுவரை எந்த நாடும் கண்டறியவில்லை. எனவே, சூரியனிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் செயற்கைகோளை நிலைநிறுத்தி, அதன் மூலம் சூரியனின் செயல்பாடுகள் தொடர்பாக ஆராய்வது தான் ஆதித்யா எல்1 திட்டத்தின் நோக்கம். செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி 4 மாதங்கள் பயணித்து இலக்கை அடைய உள்ளது.