பொன்னை ஆற்று ரயில்வே பாலம் திடீர் சேதம் - ரயில்கள் ரத்தானதால் பொதுமக்கள் அவதி
சென்னையில் இருந்து காட்பாடி நோக்கி செல்லும் இரயில்வே பாலத்தில் உள்ள கண்களில் 38 மற்றும் 39 ஆகிய இரு கண்ணுகளின் தூண்களிலும், அதன் கீழும் லேசான விரிசல்
வேலூர் மாவட்டம் திருவலம் வழியே பாயும் பொன்னை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது பழைய ரயில்வே பாலம். கடந்த மாதம் பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் பழைய ரயில்வே பாலத்தில் சிறியதாக விரிசல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அப்பாதை வழியாக இயக்கப்படும் 3 பயணிகள் ரயில்கள் நேற்று மாலை நிறுத்தப்பட்டுள்ளது. பல இரயில்கள் தாமதமாக சென்றன. சம்பவ இடத்தில் இரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ரயில்வே அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தில் ரயில்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் சென்னையிலிருந்து மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் விரைவு ரயில், சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6.20-க்கு புறப்பட்டு வேலூர் கண்டொன்மெட் செல்லும் பயணிகள் மின்சார ரயில் மற்றும் அரக்கோணத்தில் மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வரை செல்லும் பயணிகள் மின்சார ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. முன் அறிவிப்பின்றி திடீரென ரயி்ல்கள் ரத்து செய்யப்பட்டதால் பணி முடித்து வீடு திரும்பும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்கள். தற்போதைக்கு காட்பாடியில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை நோக்கி செல்லும் பால வழித்தடத்தில் ஒருவழி பாதையாக அனைத்து ரயில்களும் இயக்கப்படுவதால் பல ரயில்கள் அங்கங்கே பாதி வழியில் நிறுத்தப்பட்டு காலதாமதமாக செல்கின்றன. இதனால் பயணிகள் கடும் இன்னல்களுக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த மாதம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடகிழக்கு பருவழை தமிழகம் மற்றும் ஆந்திராவில் கொட்டித்தீர்த்தது. இதனால் ஆந்திராவை நீர்பிடிப்பு பகுதியாக கொண்டு ஆந்திராவில் நிவா ஆறு என்ற பெயரில் தமிழகத்தில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் அடி எடுத்து வைத்து பொன்னை ஆறாக பாயும் பொன்னை ஆறு மேல்விஷாரம் அருகே பாலாற்றில் கலக்கிறது. பொன்னை ஆற்றின் குறுக்கே திருவலம் பகுதியில் அமைந்துள்ளது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இரயில்வே பாலம் இந்நிலையில் கனமழையினாலும் கடந்த மாதம் 14-ம் தேதி பொன்னை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு சுமார் 60 ஆயிரம் கனஅடி வரை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதற்க்கு முன் 1930ஆம் ஆண்டு 55 ஆயிரம் கனஅடி பதிவாகி இருந்தது. தற்போது தண்ணீர் வரத்து குறைந்து சிறிய அளவுக்கே தண்ணீர் சென்றுகொண்டுள்ளது.
வரலாறு காணாத பெரு வெள்ளம் காரணமாக பொன்னை ஆறு பாலாற்றில் சென்று கலக்கும் வழித்தடத்தின் குறுக்கே திருவலம்- முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் பொன்னை ஆற்றுப்பாலத்தினை இரயில்வே ஊழியர்கள் நேற்று பிற்பகல் ஆய்வு செய்தனர். அப்போது சென்னையில் இருந்து காட்பாடி நோக்கி செல்லும் இரயில்வே பாலத்தில் உள்ள கண்களில் 38 மற்றும் 39 ஆகிய இரு கண்ணுகளின் தூண்களிலும், அதன் கீழும் லேசான விரிசல் இருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவலை அடுத்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து காட்பாடி மார்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளது.