Women Safety Slippers: ”ஆபத்துக்கு செருப்பை அழுத்தவும்” ஷாக் அடிக்கும், பள்ளி மாணவர்களின் அற்புத கண்டுபிடிப்பு..!
Women Safety Slippers: பெண்களின் பாதுகாப்பிற்காக பள்ளி மாணவர்கள் வடிவமைத்த காலணி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Women Safety Slippers: பெண்களின் பாதுகாப்பிற்காக SOS எச்சரிக்கை அனுப்பும் வகையில் பள்ளி மாணவர்கள் காலணியை வடிவமைத்துள்ளனர்.
பெண்கள் பாதுகாப்பு:
பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அண்மையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை வரை விதிக்கும் புதிய சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு கூட அமல்படுத்தியது. அதேநேரம், பெண்கள் தங்களது பாதுகாப்பிற்காக பெப்பர் ஸ்ப்ரே, காவலர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கும் எஸ்ஒஎஸ் சிக்னல் வசதியை பயன்படுத்துவது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்றுகின்றனர். அதன் மேம்பட்ட அம்சமாக தான், உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய செருப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் அந்த செருப்பை பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
பள்ளி மாணவர்கள் வடிவமைத்த ”செருப்பு”
உத்தரபிரதேசத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் சிஸ்வா பஜாரில் அமைந்துள்ள, RPIC பள்ளியைச் சேர்ந்த அம்ரித் திவாரி மற்றும் கோமல் ஜெய்ஸ்வால் ஆகியோர் இணைந்து பெண் பாதுகாப்பிற்கான இந்த காலணியை வடிவமைத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு நடைமுறை மற்றும் பயன்பாட்டின் எளிமை ஆகியவற்றில் கவனம் செலுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அவசர நேரத்தில் தொலைபேசியை அணுக முடியாவிட்டாலும், ஆபத்தில் உள்ள எவரும் அதை பயன்படுத்த முடியும் என்பதை உறுதிசெய்கிறது. ஒரு ஜோடி செருப்பின் விலை ரூ.2,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்துவது எப்படி?
மாணவர்கள் வடிவமைத்த மொபைல் செயலியுடன் இணைக்கப்பட்ட காலணியில் கால்விரலின் கீழ் ஒரு பொத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அழுத்தும் போது SOS எச்சரிக்கையை அனுப்பும். அதனை குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது பயனர் தேர்ந்தெடுக்கும் வேறு எந்த தனிநபரின் ஸ்மார்ட்போன்களுக்கும், அலெர்ட் எச்சரிக்கையை வழங்க புரோகிராம் செய்யலாம். செருப்பு அணிந்த நபரின் இருப்பிடம் மற்றும் அணிந்தவருக்கு அருகில் என்ன நடக்கிறது என்ற ஆடியோவையும், பெறுநருடன் எச்சரிக்கை பகிர்ந்து கொள்கிறது. மேலும், காலணிகளை அணிந்த பெண்ணுக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல், தாக்குபவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு மின்சாரத்தை உருவாக்கும் திறனையும் இந்த காலணிகள் கொண்டுள்ளது என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தனித்துவமான பாதுகாப்பு நடவடிக்கை, செருப்புகளை தகவல்தொடர்புக்கான ஒரு கருவியாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட பாதுகாப்பிற்கான வழிமுறையாகவும் மேம்படுத்தியுள்ளது.
மாணவர்கள் சொல்வது என்ன?
”வரும் நாட்களில், செருப்பில் கேமராவை பொருத்த யோசித்து வருவதாகவும், எங்கள் இலக்கு பாதுகாப்பை மலிவு மற்றும் பயனுள்ள ஒன்றாக மாற்ற வேண்டும் என்பதே” என அம்ரித் திவாரி மற்றும் கோமல் ஜெய்ஸ்வால் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனவே, விரைவில் அரசு ஆதரவுடன் இந்த காலணி பரவலான பயன்பாட்டிற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

