Twitter Grievance Officer : பணிந்தது ட்விட்டர், குறை தீர்க்கும் அதிகாரி நியமனம்..!
சமூக இணைய தளம், டிஜிட்டல் மீடியா மற்றும் ஓடிடி தளங்களை மேற்பார்வையிடுவதற்கான பொறிமுறைகள் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளில் இடம்பெற்றுள்ளன.
ட்விட்டர் இந்தியா இந்தியாவின் குறை தீர்க்கும் அதிகாரியாக வினய் பிரகாஷ் என்பவரை நியமித்துள்ளது. இதுகுறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டர பக்கத்தில் வெளியிடப்பட்டது. தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிமுறைகள் 2021-ஐ, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்தது.
சமூக இணைய தளம், டிஜிட்டல் மீடியா மற்றும் ஓடிடி தளங்களை மேற்பார்வையிடுவதற்கான கீழ்கண்ட பொறிமுறைகள் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளில் இடம்பெற்றுள்ளன.
Information Technology (IntermediaryGuidelines and Digital Media Ethics Code) Rules 2021
1. சமூக ஊடக நிறுவனங்கள் அதன் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிட வேண்டும்.
2. புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பதற்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
3. சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர வேண்டும்.
ஏற்கெனவே ஃபேஸ்புக்கும், வாட்ஸ் அப் நிறுவனங்கள் இந்த புதிய விதிகளை ஏற்று கொள்வதாக அறிவித்தது. இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனமும் இந்தியாவின் குறை தீர்க்கும் அதிகாரியை நியமித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில்மனுவை தாக்கல் செய்த ட்விட்டர் நிறுவனம், புதிய அதிகாரியை நியமிக்க 8 வாரகாலம் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்தது.
Twitter | 'என்னதான் சொல்றீங்க?' நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராக ட்விட்டருக்கு சம்மன்!
இந்தியாவில் 53 கோடி பேர் வாட்ஸ்அப், 44.8 கோடி பேர் யூ ட்யூப் , 41 கோடி பேர் பேஸ்புக், 21 கோடி பேர் இன்ஸ்டாகிராம், 1.75 கோடி பேர் ட்விட்டர் ஆகிய சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
முன்னதாக, இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய தகவல் தொழில்நுட்ப அமைசச்சர், " இந்தியாவில் தொழில் செய்ய சமூக ஊடகத்தளங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள், இந்திய அரசியலமைப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கேள்விகள் எழுப்பவும், விமர்சிக்கவும், சமூக ஊடக தளங்களை பயன்படுத்தலாம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 குறித்து மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு செயல்முறைகள் பிரிவு கவலை தெரிவித்தது. இந்த புதிய விதிகள், சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமையை பறிப்பதாக அமையும் என்று தனது குறிப்பில் தெரிவித்தது.
முன்னதாக, புதிய விதிமுறை தொடர்பாக கருத்து தெரிவித்த ட்விட்டர் நிறுவனம், "புதிய விதிமுறைகளில் உள்ள சில பகுதிகள், மக்களின் பங்கேற்புடன் கூடிய திறந்த, வெளிப்படையான, சுதந்திரமான பேச்சுரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. புதிய விதிமுறைகளில் சில மாற்றங்களை முன்வைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதற்காக, இந்திய அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான உரையாடலைத் தொடருவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், சிவில் சமூகம், தொழில்நிறுவனங்கள் ஆகியோரின் கூட்டு முயற்சி அடிப்படையிலான அணுகுமுறையே தீர்வுகளை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தது.