Truecaller : ட்ரூ காலர் யூஸ் பண்றீங்களா? இனி இந்த ஆப்ஷன் கிடையாது.. கூகுளின் புது ரூல்..
கூகுளின் ப்ளே ஸ்டோர் அடுத்தடுத்து பல அப்டேட்களை கொண்டு வருகிறது. அதேபோல பாலிசிகளையும் மாற்றி வருகிறது.
பலராலும் பயன்படுத்தப்படும் ஒரு ஆப் ட்ரூ காலர் (Truecaller). நமது செல்போனுக்கு ஏதேனும் தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தால் அது தொடர்பான பெயரை நமக்கு தெரியப்படுத்தவும், ஸ்பேம் அழைப்புகள் எனக் கூறக்கூடிய தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கவும் இந்த ட்ரூ காலர் உதவிகிறது. ஸ்மார்ட்போன் யூசர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ட்ரூ காலரும் தங்களது செயலியை அடுத்தடுத்து அப்டேட் செய்துகொண்டே வந்தது. பல புதுப்புது அம்சங்களை கொடுத்தது. அதில் ஒரு அம்சம்தான் கால் ரெக்கார்டிங்.
போன் பேசும் ஒவ்வொரு அழைப்பையும் ரெக்கார்டிங் செய்து வந்த நிலையில் ட்ரூ காலர் தற்போது அந்த வசதியை நீக்கவுள்ளது. பாதுகாப்பு அம்சத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் கூகுள் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. ஆண்ட்ராய்ட் போன்களின் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்கும் விதமாக ட்ரூ காலரில் இருந்து கால் ரெக்கார்டிங் அம்சம் நீக்கப்பட்டுள்ளது. வரும் மே 11ம் தேதி முதல் இந்த அம்சம் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
கூகுளின் பாலிசி..
கூகுளின் ப்ளே ஸ்டோர் அடுத்தடுத்து பல அப்டேட்களை கொண்டு வருகிறது. அதேபோல பாலிசிகளையும் மாற்றி வருகிறது. அதன்படி பாதுகாப்பு அம்சத்தை மனதில் வைத்து செயலிகள் கால் ரெக்கார்டிங் செய்யும் வசதியை கட்டுப்படுத்த கூகுள் முடிவெடுத்துள்ளது. அதன்படியே கால் ரெக்கார்டிங் ஆப்களுக்கு பல கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது கூகுள். அதன்படி தற்போது ட்ரூகாலருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலிகளுக்கு மட்டுமே இந்தக்கட்டுப்பாடு என்பதால் சில செல்போனுக்கு இது பொருந்தாது. அதாவது சியோமி, ரெட்மி, ரியல்மி போன்ற செல்போன்களில் இன்பில்டாகவே கால் ரெக்கார்டிங் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அம்சம் தொடர்ந்து இருக்கும்.
மைக்ரோஃபோன் அல்லது கேமராவைப் பயன்படுத்தினால் அதனை சுட்டிக்காட்டும் விதமாகவும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூடுதல் அம்சங்களுடன் Android 12 வருகிறது. திரையின் மேல் வலது மூலையில் உள்ள பச்சைப் புள்ளியின் மூலம் தங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா அல்லது மைக்ரோஃபோன் பயன்பாட்டில் உள்ளதா என்பதை பயனர் அறிந்துகொள்ளலாம்.