1200% அசுர வளர்ச்சி.. கெத்துகாட்டும் டெலிகிராம், சிக்னல்; சரிவில் வாட்ஸ் அப்!
வாட்ஸ் அப் பிரைவசி விவகாரத்தால் டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகள் அசுரவளர்ச்சியை அடைந்துள்ளன.
கடந்த ஜனவரி முதலே வாட்ஸ் அப் குறித்த பரபரப்பு தான். புதிய நிபந்தனைகளை விதித்து கடந்த ஜனவரியில் சர்ச்சையில் சிக்கியது வாட்ஸ் அப். குறிப்பாக புதிய நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் சேவையை தொடர முடியும் என்றும், இல்லையென்றால் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தது. தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்வோம் என்ற வாட்ஸ் அப்பின் அறிவிப்பை பயனாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
என்னதான் நிறுவனத்தில் தனியுரிமைக் கொள்கை என்றாலும், பயனர்களுக்கான பிரைவசி என்பதை வாட்ஸ் அப் போன்ற மிகப்பெரிய தகவல் பரிமாற்ற செயலிகள் உறுதி செய்ய வேண்டுமென்று பலரும் கருத்து தெரிவித்தனர். இன்னும் ஒரு படி மேலே போய், பலர் வாட்ஸ் கணக்கில் இருந்து வெளியேறினர். இதனை பயன்படுத்தி டெலிகிராம், சிக்னல் போன்ற பல செயலிகள் உள்ளே நுழையப் பார்த்தன.
சுதாரித்துக்கொண்ட வாட்ஸ் அப் நிபந்தனைக்கான கால நேரத்தை நீட்டித்தது. தற்போது நிபந்தனைகளை ஏற்பதற்கான கெடு முடிந்தாலும் பயனர்களின் கணக்கு நீக்கப்படவில்லை. நாங்கள் கணக்கை நீக்க மாட்டோம், பயனர்களுக்கு புரிய வைப்போம் என வாட்ஸ் அப் கூறுகிறது. அதேவேளையில் நிபந்தனையை ஏற்காவிட்டால் ஒவ்வொரு பயனர்களுக்கான ஒவ்வொரு அம்சங்களையும் வாட்ஸ் அப் நீக்கிக்கொண்டே வரும் என்பதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை. இதற்கிடையே இந்த வாட்ஸ் அப் பிரைவசி விவகாரத்தால் டெலிகிராம்,சிக்னல் போன்ற செயலிகள் அசுரவளர்ச்சியை அடைந்துள்ளன.
வாட்ஸ் அப்க்கு மாற்றாக சந்தைப்படுத்த இந்த இரண்டு செயலிகளும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டுள்ளன. சென்சார் டவர் டேட்டாவின் புள்ளிவிவரத்தின்படி, டெலிகிராம், சிக்னல் செயலிகள் 1200% வளர்ச்சி அடைந்துள்ளன. இது அசுர வளர்ச்சி இல்லாமல் வேறென்ன? 2021 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் சிக்னல் செயலியை முதல்முறையாக பதிவிறக்கம் செய்தவர்கள் 1192% ஆக உள்ளது. ஓராண்டு இடைவெளி கணக்கீடுப்படி ஆண்ட்ராய்ட் மற்றும் ios பயன்பாட்டில் டெலிகிராம் செயலி 98% அதிகரித்துள்ளது. 161மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருக்கிறது. வாட்ஸ் அப் அறிவிப்பு வெளியிட்ட ஜனவரியில் ராக்கெட் வேகத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டது டெலிகிராமும், சின்னலும். ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் பதிவிறக்கம் குறைந்தன.
வாட்ஸ் அப் சொல்வது போலவே என்ட்-டூ-என்ட் என்கிரிப்சனை டெலிகிராமும், சிக்னலும் தருகின்றன. வாட்ஸ் அப் மீதான அதிருப்தி, வாட்ஸ் அப் போலவே சிறப்பம்சங்களை கொண்ட மற்ற செயலிகள் மீது ஆர்வத்தை தூண்டியுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் பதிவிறக்கம் குறைவு, பயனர்களின் கணக்குகளை இழத்தல் என சரிவை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. இது தொடர்ந்தால் வாட்ஸ் அப் தனது பாலிசி விவகாரத்தில் விட்டுக்கொடுத்துதான் செல்ல வேண்டுமென கூறப்படுகிறது. பயனாளர்களை தக்கவைத்துக்கொள்ள வாட்ஸ் அப் என்ன செய்யப்போகிறது? மற்ற செயலிகளின் வளர்ச்சி வாட்ஸ் அப்பை ஓரங்கட்டுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
புதிய பெயர்.. பரிசுகள்.. முன்பதிவுடன் இந்தியாவில் களம் இறங்கிய பப்ஜி!