சேறு கலவை... பனைமரக் கட்டை... 100 ஆண்டுகளுக்கு முந்தைய முறையில் அழகிய வீடு கட்டிய இயற்கை விவசாயி!
சீர்காழி அருகே சிமெண்ட், மணல், கம்பி இன்றி 100 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய முறையில் வீடு கட்டி அசத்தியுள்ளார் இயற்கை விவசாயி.

''காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும்'-என்று கனவு கண்டார் பாரதி. வீடு என்பது பலரது கனவுகளில் ஒன்று. மனிதன் வாழ்நாளில் பெரும்பகுதியை தன் வீட்டில் தான் செலவிடுகிறான். மனிதன் தான் வாழ்ந்த வீட்டை அவன் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளமாக விட்டுச் செல்ல விரும்புகிறான். அதனால்தான் தான் கட்டும் வீட்டை ஏதாவது ஒரு தனித்துத்தோடு கட்ட விரும்புகிறோம். அவ்வாறு ஒரு தனித்துத்தோடு இயற்கையோடு ஒன்றிய வீட்டை, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த, நிம்மேலி கிராமத்தை சேர்ந்த இளம் இயற்கை விவசாயியான சுதாகர் தனது வீட்டை வடிவமைத்துள்ளார்.

மனிதன் இயற்கையை நேசித்து, இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்றும், நாம் இயற்கையை நேசித்தால், இயற்கை நம்மை நேசிக்கும் என்ற கோட்பாட்டாளரும், 'நலம்' பாரம்பரிய விவசாய அறக்கட்டளையின் செயலாளரான இவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் உள்ளிட்டவர்களின் கொள்கையினை பின்பற்றி, பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கவும், மீண்டும் முழுமையான இயற்கை விவசாயத்தை நிலைநாட்டவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அவற்றில் ஒன்றாக, ஆண்டுதோறும் சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழாவினை நடத்திவரும் சுதாகர், அடுத்தகட்ட நகர்வாக பலருக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதற்காக தனது வீட்டினை 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த முறையில் கட்டியுள்ளார். தற்போதைய கட்டிட வேலைசெய்ய இன்றியமையாத மூலப்பொருட்களான சிமெண்ட், ஆற்று மணல், கம்பி உள்ளிட்ட எந்த ஒரு பொருட்களும் 80 சதவீதம் இன்றி 1200 சதுர அடியில், மூன்று படுக்கை அறைகளுடன் கட்டி வருகிறார். இதில், பாரம்பரிய விறகடுப்பு பயன்படுத்தும் விதத்தில் சமையலறை என பல சிறப்புடன் தனது வீட்டினை தற்போது உருவாக்கியுள்ளார். 20 சதவீதம் சிமெண்ட் மற்றும் கம்பியாக லின்டர், கழிவறை தொட்டி அமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாரம்பரிய முறையில் வீடு கட்ட முடிவெடுத்த சுதாகர், பல்வேறு தரவுகளை மேற்கொண்டுள்ளார். வீட்டை கட்டுவதற்காக ராஜபாளையம் பகுதியிலிருந்து பணியாட்களை வர வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, வீடு கட்டுவதற்கான பிரத்யேகமான செங்கற்கள், கருங்கற்களை மதுரை சுற்றுவட்டார பகுதியிலிருந்தும், சுண்ணாம்பு போன்ற பொருட்களை அரியலூர் பகுதிகளிலிருந்தும் வாங்கியிருக்கிறார். வீடு கட்டுவதற்கான சிமெண்ட், கம்பிக்கு மாற்றாக, முக்கிய மூலப்பொருளான சுண்ணாம்பு, பனை வெல்லம், கடுக்காய் போன்ற பொருட்களை தானே தயார் செய்து தனது கனவு இல்லத்திற்கான செயல் வடிவத்தை கொடுத்துள்ளார் சுதாகர்.

தற்போது தமிழ்நாட்டில் நிலவும் மணல் தட்டுப்பாட்டால், எந்த ஒரு பாதிப்புமின்றி தனது வீட்டிற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டு, மணலைக் கொண்டு சேறு கலவையை உருவாக்கி, சிமெண்டைவிட பல மடங்கு வலுவான கட்டிடத்தை உருவாக்கியுள்ளார் சுதாகர். கம்பி கொண்டு சென்ட்ரிங் அடித்து சிமெண்ட், ஜல்லி, மணல் குழைத்து அமைக்கும் மேல்கூறையை கண்ட பலருக்கும், பனை மரத்து கட்டைகளை குறுக்கே வைத்து அதன் மீது செங்கற்களை அடுக்கி அமைக்கப்பட்ட மேற்கூரை, பலரையும் வியப்படைய செய்கிறது.

பழமையும், பாரம்பரியமும் மாறாது கலைநயத்துடன் உருவாகும் இந்த வீ்டு, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் என்கிறார். வெயில் காலங்களில் குளிர்ச்சியுடனும், மழை காலங்களில் கதகதப்புடன், வீட்டினுள் வைக்கப்படும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் தன்மை கொண்ட இவ்வீடு மற்ற வீடுகளைக் காட்டிலும் 25 சதவீதம் குறைந்த செலவில் வடிவமைக்கலாம் என்றும், இந்த வீட்டின் மற்றொரு சிறப்பாக ஜன்னல் அரிகால் உள்ளிட்ட மர வேலைகள் செய்யப்பட்ட இடத்தில் தாமரை மற்றும் வாழை இலைகள் வைத்து கட்டப்பட்டுள்ளதால், மரங்களை கரையான் போன்ற பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் என்றும் கூறுகிறார். இவ் வீட்டினை பல நூறு ஆண்டுகள் கழித்து பிரித்தெடுத்து, மீண்டும் கற்கள் ஜன்னல் கதவுகள் போன்றவற்றை முழுமையாக பயன்படுத்தலாம் என்றும் பெருமையுடன் கூறுகிறார் இயற்கை விவசாயியான சுதாகர்.

மேலும் தற்போது கட்டிட கட்டுமான பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள இந்த சூழலில், இது போன்று பாரம்பரிய முறையிலான கட்டிட அமைப்பு பல நடுத்தர குடும்பத்தின் கனவு இல்லத்தை நினைவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.





















