Samsung Warning| நீங்க சாம்சங் பயனாளரா.. தகவல் பறிபோகலாம்.. உஷாரய்யா உஷாரு..
வருகிற ஜுன் 30-ஆம் தேதிக்குள் சாம்சங் க்ளவுடில் உள்ள தகவல்களை பதிவிறக்கம் செய்து அதனை கூகுள் ட்ரைவ் அல்லது வேறு ஒரு ட்ரைவில் சேமித்துக்கொள்ள முடியும். ஜுன் 30-ஐ கடந்துவிட்டால் சாம்சங் க்ளவுடில் சேமித்து வைக்கப்பட்ட அனைத்து தகவல்களும் அழிந்துவிடும்
மொபைல்ஃபோன் சந்தையில் பல ஆண்டுகளாக முன்னணி நிறுவனமாக இருந்து வருவது தென்கொரியவை பூர்வீகமாக கொண்ட சாம்சங் நிறுவனம். இந்நிறுவனம் கடந்த மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது அதன்படி தங்களுக்கான க்ளவுட் ஸ்டோரேஜை தாங்கள் திரும்ப பெறப்போவதாகவும் ஏப்ரல் 29-க்குள் உங்கள் தகவல்களை ஒன் ட்ரைவுக்கு மாற்றிக்கொள்ளுங்கள் என்பதுதான் அந்த அறிவிப்பு. சாம்சங் க்ளவுடின் மூலம், மொபைல் ஸ்டோரேஜில் உள்ள புகைப்படம், வீடியோ, ஆடியோ, தொடர்புகள் என அனைத்தையும் சேமித்து வைக்கமுடியும். இதன் காரணமாக மொபைல்ஃபோனின் ஸ்டோரெஜ் இடைவெளி அதிகமாக கிடைக்கும் மேலும் சேமித்து வைக்கப்பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும். சாம்சங் வெளியிட்ட இந்த அறிவிப்பால், சாம்சங் பயனாளர்கள் பலரும் சேமித்து வைத்திருந்த தகவல்களை ஒன் ட்ரைவுக்கு உடனடியாக மாற்றினர்.
ஒன் ட்ரைவ் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடையது என்றாலும் சாம்சங் உடனான தொழில்முறை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கான 5 ஜிபி வரையிலான இலவச க்ளவுட் ஸ்டோரேஜை , சாம்சங் பயனாளர்களுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஸ்டோரேஜை 5-ஜிபிக்கும் அதிகமாக நீட்டிக்க விரும்பினால் ஒன் ட்ரைவிடம் இருந்து பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடு ஏப்ரல் 29-ஆம் தேதி வரையில் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. அதனை தவறவிட்டவர்களுக்கு தற்பொழுது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றாலும் அவர்கள் ஒன் ட்ரைவ் க்ளவுட் ஸ்பேசினை பயன்படுத்த முடியாது .
ஆனால் வருகிற ஜீன் 30-ஆம் தேதிக்குள் சாம்சங் க்ளவுடில் உள்ள தகவல்களை பதிவிறக்கம் செய்து அதனை கூகுள் ட்ரைவ் அல்லது வேறு ஒரு ட்ரைவில் சேமித்துக்கொள்ள முடியும். ஜீன் 30-ஐ கடந்துவிட்டால் சாம்சங் க்ளவுடில் சேமித்து வைக்கப்பட்ட அனைத்து தகவல்களும் அழிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க, இந்தியாவின் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு 30 லட்சம் டாலர்களை அதாவது 37 கோடி ரூபாயை நிவாரணமாக அளிப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனை மத்திய மற்றும் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பிரித்து வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.