Jio AirFiber: ஜியோ ஏர் ஃபைபர் இணைய சேவை, விநாயகர் சதுர்த்தி அன்று சர்ப்ரைஸ் - ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிப்பு
ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாக ஜியோ ஏர் ஃபைபர் இணைய சேவை விநாயகர் சதுர்த்தி முதல் தொடங்கும் என, அக்குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாக ஜியோ ஏர் ஃபைபர் இணைய சேவை விநாயகர் சதுர்த்தி முதல் தொடங்கும் என, அக்குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு:
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமத்தின் 46வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு அந்த குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தலைமை தாங்கினார். அதோடு, குழுமத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இஷா மற்றும் ஆகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானி “ஜியோ நிறுவனத்தின் ஏர் ஃபைபர் சேவை நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்கப்படும். இதில் பான் இந்தியா 5ஜி நெட்வர்க் பயன்படுத்தப்படும்” என தெரிவித்தார்.
வயர்ட் பிராண்ட் பேண்ட் சேவை:
ஜியோவின் ஆப்டிகல் ஃபைபர் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவையான ஜியோ ஃபைபர் சேவையை, இந்தியா முழுவதும் 1 கோடிக்கும் அதிகமானோர் சந்தா செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் சராசரியாக, ஒரு குடும்பம் மாதத்திற்கு 280ஜிபி டேட்டாவைப் பயன்படுத்துகிறது, இது ஜியோவின் தனிநபர் மொபைல் டேட்டா பயன்பாட்டை விட பத்து மடங்கு அதிகம் ஆகும்.
அதேநேரம், வயர்டு பிராட்பேண்ட் இணைப்புகளை எளிதாக்குவதற்கான கட்டமைப்புகள், அதாவது தரைக்கு அடியில் வயர்களை புதைப்பது அவசியமாகும். நகரங்களில் இது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது, ஆனால் தொலைதூர பகுதிகளில், இணைப்பிற்கு தேவையான ஆப்டிகல் ஃபைபர் கட்டமைப்பை உருவாக்குவது சவாலாக இருக்கும். தற்போதய சூழலில் ஜியோ நிறுவனத்தின் ஆப்டிகல் ஃபைபர் இந்தியா முழுவதும் 15 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் பரவியுள்ளது. ஆனால் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய அது இன்னும் போதுமானதாக இல்லை.
ஜியோ ஏர் ஃபைபர்:
இதன் காரணமாக தான், வயர்ட் பிராண்ட் பேண்ட் சேவைக்கு மாற்றாக AirFiber வருகிறது. வயர் எதுவுமின்றி காற்றின் வாயிலாகவே அதிவேகமான 5ஜி இணையசேவையை வழங்குவது தான் இத்திட்டத்தின் நோக்கம். அதன்படி, ஜியோவின் விரிவான 5G டேட்டா நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, AirFiber ஏற்கனவே உள்ள 5G டவர்களில் இருந்து டேட்டாவை சேகரித்து, அவற்றை பயனாளர்களின் வீட்டிற்கு அனுப்புவதற்கு ரிசீவர்கள் மற்றும் ரூட்டர்களின் தொகுப்பை பயன்படுத்துகிறது. இது வழக்கமாக வீட்டிற்குள் வைக்கப்படும் ரூட்டரையும், வெளிப்புறத்தில் 5G சிம் கொண்ட ஒரு சாதனத்தையும் உள்ளடக்கியது. இந்த சாதனம் அருகிலுள்ள டவர்களில் இருந்து 5G டேட்டாவை சேகரித்து 1Gbps வரையிலான பிராட்பேண்ட் வேகத்திற்கு ரூட்டருக்கு அனுப்புகிறது. உட்கட்டமைப்பை ஏற்படுத்துவது கடினமாக உள்ள பகுதிகளுக்கு இந்த புதிய அம்சம் நல்ல பலனை கொடுக்கும். அதேநேரம், மோசமான நெட்வொர்க் வசதி கொண்டுள்ள பகுதியில் வசிக்கும் பயனாளர்களுக்கு இது சாதகமாக இருக்காது.
திட்டங்கள் மற்றும் விலை
ஆப்டிகல் ஃபைபர் தினசரி 15,000 வீடுகளை இணைக்க அனுமதிக்கிறது, ஆனால் AirFiber மூலம், ஒரு நாளைக்கு 1,50,000 இணைப்புகளை அடைய புதிய திட்டம் சாதகமாக இருக்கும் என்று ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இதற்கான கட்டணம் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.