Google Workspace | 15ஜிபி தாண்டினால் இனி கட்டணம்... ஆண்ட்ராய்ட் 12.. புதிய அறிவிப்புகளை வெளியிட்ட கூகுள்!
கூகுள் நேற்று தனது புது அம்சங்களை உலகுக்கு அறிமுகம் செய்தது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூகுளின் புது அம்சங்கள் குறித்து பேசினார்.
இணைய உலகின் ராஜாவான கூகுள் புதுப்புது அப்டேட்களை கொடுத்து வருகிறது. பயனர்களின் வசதி மற்றும் பிரைவசியை பொருத்தே கூகுளின் அப்டேட்கள் இருக்கும். இந்த நிலையில் கூகுள் நேற்று தனது புது அம்சங்களை உலகுக்கு அறிமுகம் செய்தது. கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை கூகுளின் புது அம்சங்கள் குறித்து பேசினார். அதுமட்டுமின்றி இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி இது தொடர்பாக கூகுள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்தார். சுந்தர்பிச்சை மட்டுமின்றி கூகுள் அதிகாரிகள் சிலரும் புதிய அம்சங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
ஜூன் 1ம் தேதி வரை மட்டுமே கூகுள் போட்டோஸ் இலவசம். அதாவது க்ளவுட் முறையில் நாம் கூகுள் மெயில் ஐடியில் நாம் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்களுக்கு ஜூன் 1 முதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ஏற்கெனவே கொடுக்கப்பட்ட 15 ஜிபி வரை இலவசமாக பயன்படுத்தலாம். அதற்கு மேல் சென்றால் கட்டணம் செலுத்த வேண்டிவரும். ரூ.130க்கு 100ஜிபி, ரூ.210க்கு 200ஜிபி என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூகுளின் தயாரிப்பான பிக்ஸல் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால் கட்டணம் இல்லை. நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் என யோசித்தால் உங்கள் புகைப்படங்களை 15 ஜிபிக்குள் மட்டுமே வைத்திருங்கள்
டெக்ஸ்டாப் வெர்ஷனுக்கு டார்க் மோட் ஆப்ஷனை கூகுள் சோதனை செய்து வந்தது. இந்நிலையில் டார்க் மோட் ஆப்ஷனை தற்போது கூகுள் அறிமுகம் செய்துள்ளது. டார்க் மோட் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் கண்ணுக்கு இதமாக இனி கூகுளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
காலர் ஐடி அனெளன்ஸ்மெண்ட் என்ற ஆப்ஷனை கூகுள் கொண்டு வந்துள்ளது. அதாவது நீங்கள் ஹெட்போனில் பாடல் கேட்டுகொண்டு இருந்தால் அழைப்பவர்களின் பெயர் அல்லது தொலைபேசி எண்ணை கூகுள் உங்களுக்கு தெரிவிக்கும். இதன் மூலம் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கலாம் என கூகுள் கூறுகிறது. கூகுள் போன்களில் மட்டுமல்லாமல் கூகுள் செயலி மூலம் அனைத்து ஆண்ட்ராய்ட் போன்களிலும் இந்த முறையை பயன்படுத்திக்கொள்ளலாம். பார்வைக்குறைபாடு உடையவர்களுக்கு இந்த அம்சம் நிச்சயம் கைகொடுக்கும் என கூகுள் நம்புகிறது. இந்த ஆப்ஷன் கட்டாயம் இல்லை. தேவையென்றால் மட்டுமே பயன்படுத்தும் ஆப்ஷனையும் கொடுத்துள்ளது கூகுள்.
கூகுள் மொழியை மாற்றுவதற்கான வேலையில் தீவிரமாக உள்ளது. அதாவது ஒரு மொழியில் இருந்து வேறு எந்த மொழிக்கும் அதே தகவலை கொடுக்க கூகுள் உதவும்.அதேபோல் கூகுள் இமேஜ் தகவல்களை எளிதில் கண்டுபிடிக்க உதவும் தொழில்நுட்பமும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. கூகுள் சர்ச் ஆப்ஷனை மேம்படுத்தவும் கூகுள் அப்டேட் செய்துள்ளது.
LamDA என்ற புதிய தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது கூகுள் அசிஸ்டண்டை மேலும் நெருக்கமாக்கும். சாதாரணமாக கூகுள் அசிஸ்டெண்டிடம் ஒரு கேள்வி கேட்டால் அது தொடர்பான தகவல்களை தரும். இந்த LamDA தொழில்நுட்பம் கூகுள் அசிஸ்டெண்டை மேலும் நெருக்கமாக பேச வைக்கும். சூரியன் மறையும் மாலையில் சிங்கம் நிற்பது போல என நீங்கள் கூகுள் அசிஸ்டெண்டிடம் கேட்டால் அது தொடர்பான வீடியோக்களை உங்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும்
கூகுள் பயனர்களின் தகவல்களை பாதுகாப்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறது. அதற்கான ஒரு அப்டேட்டாக பாஸ்வேர்டுகளை பாதுகாப்பதை மேலும் பலப்படுத்தியுள்ளது.
ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் முறையில் கூகுள் மேப் மேலும் அப்டேட்டாக உருவாகியுள்ளது. 4 புதிய AI மூலம் கூகுள் மேப் இன்னும் சிறப்பானதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமான அப்டேட்டாக ஆண்ட்ராய்ட் 12 ஐ கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கூகுள் செயலிகள் வேகமாகவும், பாதுகாப்பு அம்சங்களுடனும் இருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆண்டிராய்ட் போனில் இருந்து ஆண்ட்ராய்ட் டிவியை இயக்குவதை மேலும் எளிதாக்குகிறது கூகுள். 1ப்ளஸ், ஓபோ, ரியல்மி உள்ளிட்ட 11 செல்போன் நிறுவனத்துடன் இதனை சோதனை முறையில் கொண்டுவரவுள்ளது.
கூகுள் சாம்சங் இணைந்து WearOSஐ அறிமுகம் செய்துள்ளன. இதன் மூலம் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும் வசதி, வேகமான பெர்பாமன்ஸ் உள்ளிட்ட வசதிகளை பெற முடியும் எனதெரிவித்துள்ளது.