Modi Named Moon: பிரதமர் மோடி வெச்ச பேரு..! நிலா யாருக்கு சொந்தம்? என்னதான் சொல்லுது சர்வதேச விண்வெளி ஒப்பந்தம்?
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், நிலா யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், நிலா யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலம்:
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 23ம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
பிரதமர் மோடி பெருமிதம்:
இந்நிலையில், தென்னாப்ரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி நேராக இன்று காலை பெங்களூரு வந்தடைந்தார். தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, சந்திரயான் 3 தொடர்பான பல்வேறு தகவல்களை கேட்டு தெரிந்துகொண்டார். பின்பு ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பேசிய மோடி, இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என குறிப்பிட்டார்.
பேரு வெச்ச பிரதமர் மோடி:
தொடர்ந்து “சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய குறிப்பிட்ட நிலவின் மேற்பகுதி சிவசக்தி என அடையாளம் காணப்படும். சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய ஆகஸ்ட் 23ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும். அதோடு, கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் பாகம் விழுந்து நொறுங்கிய பகுதி திரங்கா என அடையாளம் காணப்படும்” எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வைரல்:
மேற்குறிப்பிட்ட பெயர்கள் தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டதுமே, அவை இணையத்தில் வைரலகியுள்ளன. அதேநேரம், நிலவின் மேற்பகுதிக்கு இப்படி யார் வேண்டுமானாலும் பெயர் வைக்கலாமா, நிலவை யார் வேண்டுமானாலும் உரிமை கோரலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச விண்வெளி ஒப்பந்தம் என்ன சொல்கிறது என்ற விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
பேரில்லாத நிலா:
முதலில் நிலா என்பதே நமது புவியை சுற்றி வரும் இயற்கையான துணைக்கோளின் பெயர் அல்ல என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இயற்கையான துணைக்கோளை அடையாளப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் பொதுப்பெயர் தான் நிலா. வியாழன் கிரகத்தைச் சுற்றி நான்கு நிலவுகள் இருப்பதை 1610-ம் ஆண்டு கலிலியோ கண்டுபிடிக்கும் வரை மற்ற கிரகங்களிலும் நிலா இருக்கிறது என்பதையே மனிதன் அறிந்திருக்கவில்லை. இதன் காரணமாகவே அதன் பிறகு கண்டறியப்பட்ட பல்வேறு கிரகங்களின் துணைக்கோள்களுக்கும் வெவ்வேறு பெயர்கள் வைக்கப்படுகின்றன. ஆனாலும், புவியை சுற்றி வரும் நிலாவிற்கு மட்டும் இன்றளவும் எந்த ஒரு பெயரும் வைக்கப்படவில்லை.
நிலா யாருக்கு சொந்தம்?
இந்த நிலையில் தான் நிலா என்பது யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக, கடந்த 1967ம் ஆண்டு வெளிப்புற விண்வெளி ஒப்பந்தம்(Outer Space Treaty of 1967) ஒன்று கையெழுத்தானது. இதில் இந்தியா உள்பட 100 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் என்பது நிலா என்பது அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவை குறிப்பிட்ட நாடுகள் உரிமை கொண்டாட முடியாது. நிலவில் எந்த நாடுகள் தரையிறங்கி கொடியை நட்டு முத்திரையை பதித்தாலும் நிலவை யாரும் தனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாட முடியாது என அந்த ஒப்பந்தம் உறுதியாக வலியுறுத்துகிறது.
புதிய ஒப்பந்தம்..!
அதேநேரம், சர்வதேச சட்டம் என்பது 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்பட கூடியது. அதன்படி கடந்த 2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கு 109 நாடுகள் சம்மதம் தெரிவித்து இருக்கின்றன. 23 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இருப்பினும் இந்த ஒப்பந்தம் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. இந்த சூழலை பயன்படுத்தி நிலவில் தரையிறங்கிய நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்டவை நிலவை உரிமை கொண்டாடும் வகையில் சட்டத்தை மாற்றம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதனால் தான் பல நாடுகளும் நிலவில் தரையிறங்க ஆர்வமாக உள்ளன என்றும், சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
யார் பெயர் சூட்டலாம்?
நிலவுகளுக்கு பெயர் சூட்டுவது என்பது எந்தவொரு தனிநபராலும் முடியாது. இந்த பணிகளை சர்வதேச வானியல் ஒன்றிய குழு தான் கவனித்து வருகிறது. அதோடு, புவியை சுற்றி வரும் நிலா இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிலவின் வெளிச்சமான பகுதி லூனார் டெர்ரா எனவும், இதுவரை அறிந்திடாத இருட்டான பகுதி லூனார் மரியா என்றும் மட்டுமே, தற்போது வரை சர்வதேச அளவில் அடையாளம் காணப்படுகிறது. நிலவில் உள்ள ஒரு சிறு பள்ளத்திற்கு பெயரிடுவது கூட பெரும் கவுரவமாக கருதப்படுகிறது. சர்வதேச சந்திர புவியியல் சங்கத்தின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் அந்த பள்ளங்களின் பெயரைக் கூட யாராலும் மாற்ற முடியாது.