JioBook Laptop: ஜியோ லேப்டாப்.. பட்ஜெட் ஸ்மார்ட் டிவி.. பலே ப்ளானுடன் அம்பானி! அச்சத்தில் போட்டி நிறுவனங்கள்!
செல்போன் சிம்கார்டில் இருந்து இப்போது பைபர் இண்டர்நெட்டுக்கு தாவியுள்ளது ஜியோ. அதேவேகத்தில் லேப்டாப் பக்கம் தன் பக்கத்தை திருப்பியுள்ளது ஜியோ.
ஜியோ..
ஸ்மார்ட்போன், இண்டர்நெட் என டிஜிட்டல் உலகம் அடுத்தக்கட்டத்துக்கு சென்ற போது தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மாறிமாறி புதிய திட்டங்களை அறிவித்தன. ஐடியா, வோடோபோன், ஏர்டெல் என சந்தையில் போட்டிப்போட்டுக்கொண்டு இண்டர்நெட் ஆஃபர்கள் அள்ளி வீசப்பட்டன. அப்போதுதான் களம் இறங்கியது ஜியோ. அதன்பிறகு இண்டர்நெட் உலகில் ஏற்பட்டது பெரும் புரட்சி என்று கூட சொல்லலாம். தொடக்கத்தில் இலவசமாக இண்டர்நெட் கொடுக்கப்பட்டது.
மாதத்திற்கு 2 ஜிபி என்று லிமிடெட் மீல்ஸ் சாப்பிட்ட இணைய உலகம், ஒரு நாளைக்கே 2ஜிபி என்ற அன்லிமிடெட் மீல்ஸால் நிறைந்தது. ஜியோ கொடுத்த ஆஃபர்களால் திக்குமுக்காடியது வாடிக்கையாளர்கள் மட்டுமே அல்ல. போட்டி நிறுவனங்களும் தான். ஜியோ அள்ளிக்கொடுக்கும் போது நாம் கிள்ளிக்கொடுத்தால் சரியாகுமா? என யோசித்த மற்ற நிறுவனங்கள் இறங்கி வரத் தொடங்கின. ஆனால் ஜியோ அளவுக்கு இறங்க முடியவில்லை. இதனால் காலம்காலமாக ஏர்டெல், வோடோபோன் என பயன்படுத்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அந்த சிம்கார்டை இன்கம்மிங்குக்கு மட்டுமே என பயன்படுத்தத் தொடங்கினர். பலரும் இண்டர்நெட் பேக்கேஜ் என்றால் ஜியோ தான் என்று ஒதுங்கத் தொடங்கினர். இதனால் அடிவாங்கியது ஏர்டெல், வோடோபோன் இப்படி தொலைத்தொடர்பில் ஒரு புரட்சியை உண்டாக்கிய ஜியோ இப்போது தன்னுடைய எல்லையை பரப்பப் தொடங்கியுள்ளது.
லேப்டாப்..
செல்போன் சிம்கார்டில் இருந்து இப்போது பைபர் இண்டர்நெட்டுக்கு தாவியுள்ளது ஜியோ. அதேவேகத்தில் லேப்டாப் பக்கம் தன் பக்கத்தை திருப்பியுள்ளது ஜியோ. மடிக்கணினி என்றாலே குறைந்தது 40ஆயிரம் என்ற அளவே உள்ளது. இந்த விலை அனைவருக்கும் சாத்தியமா என்றால் இல்லைதான். இதனை சரியாக புரிந்துகொண்டுள்ள ஜியோ விலை குறைவான லேப்டாப்பை களமிறக்கினால் சந்தையை எளிதாக பிடித்துவிடலாம் என திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜியோ போட்டுவைத்துள்ள திட்டம்தாம் ஜியோ புக்.
கூட்டு ஒப்பந்தத்தின்படி தனியார் நிறுவனத்துடன் கூட்டு வைத்து இந்த ஜியோ புக் லேப்டாப்பை சந்தையில் களமிறக்க ஜியோ திட்டமிட்டுள்ளதாம். இந்த மடிக்கணினியில் மீடியாடெக்கின் சிப் பயன்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது. தற்போது சந்தையில் இருக்கும் லேப்டாப்கள் Intel, AMD நிறுவன சிப்செட்டுகளுடன் சந்தையில் உள்ளன. ஆனால் ஜியோ பயன்படுத்துவதாக சொல்லும் மீடியாடெக் சிப் விலை குறைவு. இதனால் லேப்டாப்பின் விலையும் குறைவாக கொடுக்க முடியும் என்பது ஜியோவின் கணக்கு. அதேபோல் விண்டோஸ் 10 பயன்படுத்தப்படலாம் எனவும் தெரிகிறது.
ஸ்மார்ட் டிவி..
விலை குறைவாக அதற்கேற்ப தரத்திலான லேப்டாப்களை கொடுப்பதே ஜியோவின் திட்டம். அதனால் பெரிய அளவிலான எடிட்டிங், கேம்களுக்கு ஜியோவின் லேப்டாப் வேலைக்கு ஆகுமா என்பது தெரியவில்லை. அதேவேலையில் எளிய, பொதுவான பயன்பாடுகளுக்கு நிச்சயம் இது பயன்படும் எனத் தெரிகிறது. லேப்டாப் மட்டுமின்றி ஸ்மார்ட் டிவி பயன்பாட்டிலும் ஜியோ அதிக கவனம் செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவையான சிறப்பம்சங்களுடன் சரியான தரத்தில் குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி என்றால் நிச்சயம் ஜியோ சந்தையை பிடித்துவிடும் . ஏற்கெனவே ரியல்மி, எம் ஐ போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவி சந்தையை பிடித்துவரும் நிலையில் ஜியோ களமிறங்கினால் சரியான போட்டி நிலவும் எனத் தெரிகிறது.