உங்களுடைய தகவல்கள் இணையதளத்தில் லீக் ஆகியுள்ளதா என்பதை எப்படி கண்டறிவது?
உங்களுடைய டிஜிட்டல் கணக்குகள் மற்றும் தரவுகள் கசிந்து உள்ளதா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது தெரியுமா?
டிஜிட்டல் யுகத்தில் நம்முடைய தகவல்கள் கசிந்து போனால் அதன் விளைவுகள் மிகவும் ஆபத்தான ஒன்று. அதிலும் குறிப்பாக உங்களுடைய கடவுச்சொல், மின்னஞ்சல் முகவரி, டெபிட் கார்டு எண், கிரெடிட் கார்டு எண் உள்ளிட்ட விவரங்கள் கசிந்து போனால் இதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும். உலகம் முழுவதும் ஹேக்கர்களை இந்த தகவல்களை எடுக்க பல முறையில் முயற்சி செய்து வருகின்றனர். ஒரு சில சமயங்களில் அவர்கள் தரவுகளை எடுக்கவும் செய்கின்றனர். இதனால் பெருமளவில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஏனென்றால் ஹேக் செய்யப்பட்ட உங்களுடைய தரவுகளின் மூலம் ஒரு போலி வங்கிக்கணக்கு தொடங்கலாம்.
மேலும் உங்களுடைய மற்ற சமூக வலைத்தள பக்கங்களையும் பயன்படுத்த முயற்சி செய்யலாம். குறிப்பாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்களுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை வைத்து உங்களுக்கு ஃபிஷ்ஷிங் என்ற முறையில் மேலும் லிங்க் அனுப்பி தகவல்களை பெற முயற்சி செய்யலாம். எனவே டிஜிட்டல் தளத்தில் உங்களுடைய தரவுகள் மற்றும் தகவல்களை மிகவும் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இந்தச் சூழலில் உங்களுடைய தகவல் கசிந்து உள்ளதா? என்பதை எப்படி அறிய முடியும் என்ற கேள்வி உங்களுக்கு எழும். இதை கண்டுபிடிக்க Haveibeenpwned.com என்ற வலைத்தளத்திற்கு சென்று உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவேண்டும்.
ஒருவேளை உங்களுடைய தகவல்கள் கசிந்து இருந்தால் இந்த தளத்தில் தெரிந்துவிடும். அப்போது நீங்கள் உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றுங்கள். பொதுவாக நம்முடைய மின்னஞ்சல் உள்ளிட்ட பல டிஜிட்டல் கணக்குகளின் கடவுச்சொல்லை 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது. அந்தவகையில் நீங்கள் தற்போது உங்களுடைய கடவுச்சொல்லை நிச்சயம் மாற்றவேண்டும்.
உங்களுடைய தரவுகள் கசியவில்லை என்றால் அதுவும் இந்த தளத்தில் வரும். அப்போது நீங்கள் உடனே உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றவேண்டிய அவசியம் இல்லை. எனினும் 6 மாதத்துக்கு மேலாக கடவுச்சொல்லை மாற்றவில்லை என்றால் நீங்கள் நிச்சயம் மாற்றவது உங்களுக்கும் நல்லது.