செல்போனுக்கு விளம்பரம் வந்து குவியுதா? இந்தாங்க சில டிப்ஸ்! உங்க செல்போன் இனி க்ளீன்!
உங்கள் செல்போனுக்கு வரும் விளம்பரங்களை கட்டுப்படுத்த சில டிப்ஸ்.!
இன்று ஆண்ட்ராய்ட் போன் இல்லாதவர்கள் மிக மிக குறைவு. பட்ஜெட் விலைக்குள் பலதரப்பட்ட சிறப்பம்சங்களுடன் பலவகையான செல்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. கேமரா பயன்பாட்டுக்கா? கேம் விளையாடவா? ஆன்லைன் பயன்பாட்டுக்கா? என தேவைக்கு ஏற்ப சிறப்பம்சங்களை பார்த்து செல்போனை வாங்கிக்கொள்ளலாம். செல்போனை வாங்கி இண்டர்நெட் கனெக்ஷனை கொடுத்தால் சில நாட்களிலேயே நமது போனில் பல விளம்பரங்கள் சுற்றி சுற்றி அடிக்கும். எங்கிருந்து இந்த விளம்பரங்கள் வருகின்றன? எதற்காக வருகின்றன எதுவுமே புரியாது. அது பழகியே விடும். சில பேர் விளம்பரத்தை தடுக்க எதேதோ செய்து பார்ப்பார்கள். அவர்களுக்கு சில டிப்ஸ் இருக்கிறது. இதையெல்லாம் செய்தால் உங்க செல்போனுக்கு வரும் விளம்பரங்களை கட்டுப்படுத்தலாம்
1.தேவையில்லாத செயலி வேண்டாம்
உங்க செல்போனை எடுத்து பாருங்களேன். உங்களுக்கு தேவையான செயலிகள் எத்தனை இருக்கு என எண்ணுங்கள். இப்போது நீங்கள் பயன்படுத்தாத செயலிகள் பல இருக்கும். அதை எல்லாம் உடனடியாக நீக்கி விடுங்கள். அப்படி தேவையென்றாலும் தேவைக்கு ஏற்ப செயலிகளை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
2.பர்மிஷன் முக்கியம்
ஒவ்வொரு செயலியையும் நாம் இன்ஸ்டால் செய்யும் போது சில அனுமதியை கேட்கும். சில அனுமதிகளை நாம் கொடுத்தால் மட்டும் உள்ளே நுழைய முடியும். ஆனால் சில அனுமதிகளை கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் எதையுமே படிக்காமல் நாம் கொடுக்கும் agree தான் பலசமயம் தேவையில்லாத பல விளம்பரங்களை கொண்டு வரும். இனிமேல் புதிய செயலிகள் இன்ஸ்டால் செய்தால் படித்துப்பார்த்து தேவையானதற்கு மட்டும் அனுமதி கொடுங்கள்.
3.புஷ்ஷிங் விளம்பரங்கள்
புஷ்ஷிங் விளம்பரங்கள் என்பது சில செயலியில் இருந்து குறிப்பிட்ட விளம்பரங்கள் மெசேஜ் போல வந்துகொண்டே இருக்கும். அதை தடுக்க நாம் setting > apps செல்ல வேண்டும். எந்த குறிப்பிட்ட செயலியில் இருந்து விளம்பரம் வருகிறது எனப்பார்த்து அதற்காக நோட்டிபிகேஷனை ஆஃப் செய்துகொள்ளலாம்.
4. வெப்சைட் கவனம்
நாம் எதாவது ப்ரவுசர் பயன்படுத்தினால் எதாவது வெப்சைட்குள் சென்றால் show nootifications என்ற ஆப்ஷன் வரும். நாம் வெப்சைட்டுக்குள் செல்லும் அவசரத்தில் கேட்பதெற்கெல்லாம் Allow கொடுத்து சென்றுவிடுவோம். அப்படியெல்லாம் செல்வதுதான் தவறான விஷயம். நாம் கொடுக்கும் அனுமதியை வைத்து குறிப்பிட்ட வெப்சைட்டில் இருந்து விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கும். அதனால் குறிப்பிட்ட வெப்சைட்டுக்குள் செல்லும் போது தேவையில்லாத எதற்கும் அனுமதி கொடுக்கக்கூடாது. அப்படி கொடுக்கப்பட்ட தேவையில்லாத அனுமதியை எப்படி கேன்சல் செல்வது என்றால், ப்ரவுசர்குள் சென்று site settingsஐ க்ளிக் செய்து pop-ups க்குள் சென்று தேவையற்ற நோட்டிபிகேஷனை ஆப் செய்துகொள்ளலாம்.
புதிய விதிகளை ஏற்காவிட்டல் ட்விட்டர், ஃபேஸ்புக் என்ன ஆகும்?
5.செல்போன் ப்ரவுசர்கள்:
சில செல்போன் நிறுவனங்கள் அவர்களுக்கென தனி ப்ரவுசர்களை பயன்படுத்துவார்கள். அதுமாதிரியான ப்ரவுசர்களை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கூகுள் க்ரோம் பயன்படுத்தவது சிறப்பானது.
6.செல்போன் விளம்பரங்கள்:
ரெட்மி, ரியல்மி, ஒபோ போன்ற பல நிறுவனங்கள் செல்போனுடனேயே விளம்பரங்களுக்கான அனுமதியை கொடுத்துவிடுகின்றன. இதனை முழுமையாக தடை செய்யமுடியாது. ஆனால் settings>additional settings> ad serivices சென்று Recommendation adஐ ஆஃப் செய்யலாம். இந்த ஆப்ஷன்கள் செல்போனுக்கு செல்போன் வேறுபடலாம். அதனால் settings சென்று Recommendation adஐ தேடி ஆஃப் செய்யுங்கள்.
7.செயலியில் கவனம்:
புதுப்புது செயலிகளை தரவிறக்கம் செய்யும் போது கூகுள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டுமே தரவிறக்கம் செய்ய வேண்டும். சில செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இல்லாமல் நேரடியாக இணையத்தில் கிடைக்கும் அதுமாதிரியான apk செயலிகளை தவிர்க்க வேண்டும். இது மாதிரியான செயலிகள் தான் ஆபத்தானவை.
உங்களது செல்போனில் இருந்து அதிகப்படியான விளம்பரங்கள் வந்து தொல்லை கொடுத்தால் மேலே சொன்னவற்றை செய்து பாருங்கள். அப்படியும் உங்களுக்கு விளம்பரம் தொல்லை என்றால் செல்போனை பேக்கப் எடுத்துவிட்டு மறுபடி ரீசெட் செய்துவிடுங்கள். மீண்டும் செயலிகளை தரவிறக்கம் செய்யும் போது கவனமாக இருங்கள்.