புதிய விதிகளை ஏற்காவிட்டல் ட்விட்டர், ஃபேஸ்புக் என்ன ஆகும்?
இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஏற்க மறுத்துள்ளன. இதனால் அவை எதுமாதிரியான எதிர்ப்பை சந்திக்க உள்ளன.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் விதிகள் வெளியானது. இந்த விதிகளின்படி இந்தியாவில் 50 லட்சம் பயனாளர்களுக்கு மேல் உள்ள சமூக வலைத்தளங்கள் இந்த புதிய விதிகளை ஏற்க வேண்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்கள் இதை நிச்சயம் ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டுள்ளன. எனினும் இந்த விதிகளில் உள்ள சில விஷயங்களை எதிர்த்து இந்த நிறுவனங்கள் எதுவும் இதுவரை விதிகளை ஏற்கவில்லை.
இந்நிலையில் இந்த விதிகளை ஏற்காவிட்டால் ட்விட்டர், ஃபேஸ்புக் வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்களுக்கு என்ன விளைவுகள் வரும்?
இந்த புதிய விதிகளை சமூக வலைத்தளங்கள் ஏற்கவில்லை என்றால் விதி எண் 7 படி சமூக வலைத்தளங்களுக்கு இதுவரை அளித்து வந்த சில சலுகைகள் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 79(1) இனிமேல் இந்த சமூக வலைத்தளங்களுக்கு பொருந்தாது. இதன்மூலம் இந்த தளங்களில் மீது அரசு சட்ட ரீதியாக மற்றும் இந்திய தண்டனை சட்டம் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க முடியும்.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 79(1)ன்படி தங்களுடைய தளத்தில் மூன்றாம் நபர் ஒருவர் போடும் பதிவுகளுக்கு சமூக வலைத்தளங்கள் பொறுப்பு ஏற்காது. ஆனால் இந்தப் பிரிவு சமூக வலைத்தளங்களுக்கு நீக்கப்பட்டால், அந்த பதிவுகளுக்காக சமூக வலைத்தளங்கள் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை அளிக்கலாம். ஏனென்றால் தகவல் தொழில்நுட்பம் சட்டம் 2000 பிரிவு 79ல் சமூக வலைத்தளங்கள் இதை பயன்படுத்த வேண்டும் என்றால் அரசின் விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அவை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு இ-பாசி என்ற வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்று பதிவானது. இது தொடர்பாக அந்த தளத்தின் நிர்வாக இயக்குநர் உட்பட பலர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் 2008ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி புதிதாக இந்த பிரிவு 79 சேர்க்கப்பட்டது. அப்போது முதல் வலைத்தளங்களில் வரும் மூன்றாவது நபரின் பதிவிற்கு அந்த வலைத்தளம் மீது வழக்கு தொடர முடியாது என்று பாதுகாப்பு பிரிவு சேர்க்கப்பட்டது.
தற்போது புதிய விதிகளை ஏற்க மறுக்கும் சமூக வலைத்தளங்களுக்கு இந்த பாதுகாப்பு பிரிவு பொருந்தாது சூழல் உருவாகியுள்ளது. இந்த பாதுகாப்பு பிரிவு இல்லை என்றால் இந்த வலைத்தளங்கள் மீது அரசு எளிதாக வழக்கு தொடர முடியும் சூழல் உருவாகி விடும். எனவே இந்த விதிகளை ஏற்பது அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடர் இந்நிறுவனங்கள் முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே கடந்த வாரம் ட்விட்டரின் இந்திய அலுவலகத்தில் அரசு சில சோதனைகளை மேற்கொண்டது. கடந்த சில மாதங்களாகவே ட்விட்டருக்கும் இந்திய அரசுக்கும் சிறிய கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. அத்துடன் தற்போது ட்விட்டர் புதிய விதிகளை ஏற்கவில்லை என்றால் மேலும் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என்று கருதப்படுகிறது.