`118 மில்லியன் டாலர்!’ - பெண் பணியாளர்களுக்குப் பாகுபாடு... இழப்பீடு கொடுக்க ஒத்துக்கொண்டது கூகுள்..
கூகுள் நிறுவனம் பெண் பணியாளர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கியதாகவும், கீழ்நிலைப் பணிகளை மட்டுமே வழங்கியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் இழப்பீடு வழங்குவதாகக் கூறியுள்ளது.
கூகுள் நிறுவனம் பெண் பணியாளர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கியதாகவும், கீழ்நிலைப் பணிகளை மட்டுமே வழங்கியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் இழப்பீடு வழங்குவதில் மகிழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறியுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் முதல், கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய 15,500 பெண் பணியாளர்களுக்கு சுமார் 118 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீட்டை வழங்குவதாக அமெரிக்காவின் லீஃப் காப்ரேசர் ஹெய்மன் & பெர்ன்ஸ்டீன் எல்.எல்.பி, ஆல்ட்ஷூலர் பெர்ஸான் எல்.எல்.பி ஆகிய வழக்கறிஞர் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூகுள் நிறுவனம் இந்த இழப்பீட்டின் ஒரு பகுதியாக பணிக்குத் தேர்வு செய்வது, இழப்பீ வழங்குவது முதலான பணிகளை ஆய்வு செய்ய மூன்றாவது நபர்களால் நடத்தப்படும் நிறுவனம் ஒன்றின் மூலமாக மேற்கொள்ளப்படும் என்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஏ.எஃப்.பி நிறுவனத்திற்கு வழங்கிய செய்திக் குறிப்பில் கூகுள் நிறுவனம் தரப்பில் இருந்து, `எங்கள் கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றில் சமத்துவத்தை நாங்கள் உறுதியாக பின்பற்றி வந்தாலும், கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, இரு தரப்பிலும் இந்த விவகாரத்திற்குத் தீர்வு தேடும் விதமாக, அனைவரின் நலனையும் கணக்கில் கொண்டு, இந்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ எனக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு, கூகுள் நிறுவனத்தின் பல்வேறு முன்னாள் பணியாளர்கள் அந்நிறுவனத்தை எதிர்த்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஒரே விதமான பதவிகளில் இருப்போரிடையே பெண்களுக்கு ஆண்களை விட குறைவாக ஊதியம் வழங்கப்பட்டதாகவும், ஒரே பணி அனுபவம் கொண்டிருப்போரில் பெண்களுக்குத் தகுதி குறைவான பணிகளே வழங்கப்பட்டதாகவும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு பற்றிய இருதரப்பு ஒப்பந்தம் குறித்து சட்ட நிறுவனங்களின் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், `இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் கூகுள் நிறுவனம் மறுத்துள்ளதோடு, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு எப்பொதும் செயல்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை நீதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு, கூகுள் நிறுவனம் பெண்கள், ஆசிய மக்கள் முதலானோருக்கு எதிராக பாகுபாடு காட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த போது, அமெரிக்க தொழிலாளர் துறைக்கு இழப்பீடாக சுமார் 3.8 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை அளிக்க ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்