தலிபான் ஆட்சியில் இருந்து வெளியேற நினைக்கும் மக்களுக்கு உதவும் கூகுள், வாட்சப்..!
தலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்குப் பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்க, அந்த மக்களுக்குக் கைகொடுத்திருக்கின்றன கூகுள் செயலியும், வாட்சாப் செயலியும்
ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசியல் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் அரசைத் தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, பெரும்பான்மையான மக்கள் தொகையிடையே பெரும் குழப்பமும் அச்சமும் நிலவின. நாட்டை விட்டு வெளியேறுவதற்குப் பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்க, அந்த மக்களுக்குக் கைகொடுத்திருக்கின்றன கூகுள் செயலியும், வாட்சப் செயலியும். அரசுகளின் மெதுவான நடைமுறைகளைக் கடந்து, விரைவில் வேறு நாடுகளில் செட்டில் ஆக முயற்சி செய்வோரை ஒருங்கிணைக்க ஊடகவியலாளர்கள், அரசு அதிகாரிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் முதலானோர் இணையத்தைப் பயன்படுத்தி வருவதாக எம்.ஐ.டி ரிவ்யூ என்ற ஆய்வு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையத்தில் இருக்கும் சில குழுக்கள் ஆப்கானிஸ்தானின் சாலைகளை ஆய்வு செய்வதற்காக விவரங்களைச் சேகரிக்கின்றன. அதே வேளையில், ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இருந்து, காபூல் நகரத்திற்கு வர விரும்புபவர்களுக்கு வழிகாட்டு உதவிகளைச் செய்து வருகின்றன. தனிநபர் விமானங்களில் காலியிடங்கள் இருந்தால், அதுகுறித்த விவரங்களும் வழங்கப்படுகின்றன. இந்த இடத்தில் தான் Google Forms தளத்தின் செயல்பாடு முக்கியமாகிறது. ஆப்கானிஸ்தானில் பரப்பப்பட்டு வரும் மெசேஜ் ஒன்றில், Google Forms லிங் கொடுக்கப்பட்டு, ”இந்த வாரத்தின் இறுதியில் காபூல் நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட விரும்புவோர் தங்கள் விவரங்களை இதில் பூர்த்தி செய்யலாம். இந்தத் தகவல்கள் விமான நிறுவனங்களுக்கும், அரசு தரப்பிலும் வழங்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
Google Forms தளத்தின் வழியாக தேவைப்படும் கேள்விகளுக்கான விடைகளை மிக எளிதாக சேகரித்துக் கொள்ளவும், பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. இவ்வாறு இங்கு பரப்பப்படும் Google Forms லிங்கில், வெளிநாடு செல்ல விரும்புபவரின் சுய விவரங்கள், அடையாள அட்டைகள் குறித்த தகவல்கள், பாஸ்போர்ட் எண், செல்ல விரும்பும் நாட்டில் அவர்கள் மேற்கொள்ளவுள்ள விவரங்கள் முதலானவை சேகரிக்கப்படுகின்றன.
இதே விவரங்கள் Google Forms தளத்தில் மட்டுமல்லாமல், வாட்சாப் செயலியிலும் சேகரிக்கப்படுகின்றன. பலராலும் எளிதாகப் பயன்படுத்த முடிவதாலும், பலரிடமும் கைவசம் இருப்பதாலும் அமெரிக்க அரசு தரப்பில் வாட்சாப் பரப்பப்படுகிறது. மேலும், வெளிநாடு செல்ல விரும்புவோர் இப்படியான விவகாரங்களை மின்னஞ்சலில் அனுப்பாமல், வாட்சாப் செயலியில் அனுப்புவது பாதுகாப்பானது என அமெரிக்க அரசுத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டு பயன்படுத்தப்படுவதாக எம்.ஐ.டி ரிவ்யூ இதழின் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் முதலான பல்வேறு தளங்களும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தை எதிர்கொள்ள பல முக்கிய முடிவுகளை எடுத்திருந்தாலும், தலிபான்களை எதிர்கொள்வது இந்த நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்துள்ளது. தவறான காரணங்களுக்காக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படும் அபாயம் நிலவுவதால், இந்தப் பெரிய நிறுவனங்கள் நடப்பில் உள்ள சூழலைக் கவனமாகக் கண்காணித்து வருகின்றன. எனினும், ஆப்கன் மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவிகரமாகவே இருக்கின்றன.